Published : 06 May 2017 09:05 AM
Last Updated : 06 May 2017 09:05 AM

அக்சர் படேல், சந்தீப் அசத்தல்: பஞ்சாபிடம் வீழ்ந்தது பெங்களூரு

ஐபிஎல் தொடரில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக மேலும் ஒரு தோல்வியைத் தழுவியது கோலி தலைமை ஆர்சிபி அணி. 19 ரன்களில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். டிராவிஸ் ஹெட், ஆடம் மில்ன நீக்கப்பட்டு கிறிஸ் கெய்ல், சாமுவேல் பத்ரி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. ஹஷிம் ஆம்லா 1, மார்டின் கப்தில் 9 ரன்களில் நடையைக் கட்டினர். ஷான் மார்ஷ் 20, மனன் வோரா 25 ரன்கள் எடுத்து திரும்பினர். யஜுவேந்திர சாஹல் பந்தில் சுவிட்ச் ஹிட் அடிக்க முயன்று கேப்டன் மேக்ஸ்வெல் 6 ரன்களில் வெளியேறினார்.

13.5 ஓவர்களில் 78/5 என்ற நிலையில் சஹா, அக்சர் படேல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இவர்களாலும் சுதந்திரமாக அடிக்க முடியவில்லை. இந்நிலையில் 25 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த சஹா, வாட்சன் பந்தில் பவுல்டு ஆனார். மோஹித் சர்மா 6 ரன்களே எடுத்தார். இன்னிங்ஸ் முடிவில் அக்சர் படேல் 17 பந்துகளில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான 138 ரன்கள் இலக்கை எட்டியது. இது வெற்றிக்கான இலக்கல்ல ஆனால் ஆர்சிபி அணிக்கு இதுவே மகா இலக்காகிப் போனது. பெங்களூரு தரப்பில் சவுத்ரி, சாஹல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

139 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே சரியில்லை. கிறிஸ் கெய்லின் டி20 அந்திமக்காலம் நெருங்கி விட்டது போலும், சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே கிறிஸ் கெய்ல், கப்திலிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். தொடர்ந்து விராட் கோலியை 6 ரன்னிலும் டிவில்லியர்ஸை 10 ரன்களிலும் வெளியேற்றினார் சந்தீப் சர்மா. அதுவும் கோலி மேலேறி வந்த போது வீசிய இன்ஸ்விங்கர் கோலியை பவுல்டு ஆக்கியது. டிவில்லியர்ஸும் பொறுமை காக்காமல் கோலி போல் தடதடவென மேலேறி வந்து அடித்து ஆட முயல எட்ஜ் ஆகி வெளியேறினார்.

கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோருடன் தேவையில்லாமல் ஆட்டமிழந்தவர்கள் வரிசையில் கேதர் ஜாதவ் இணைந்தார். இவரும் மோஹித் சர்மா பந்தை மேலேறி வந்து ஆட முயன்று கொடியேற்றினார் கவர் திசையில். வாட்சன், அக்சர் படேல் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். ஒரு முனையில் 40 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் வெளுத்து வாங்கிய மந்தீப் சிங், மேக்ஸ்வெல் வீசிய ரவுண்ட் த விக்கெட் ’நேர்நேர்தேமா’ பந்தை புல் ஆட முயன்று பவுல்டு ஆனார்.

87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பவன் நெகி, பத்ரி போராட்டத்தைத் தொடர்ந்தனர். 18 பந்துகளில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில் 21 ரன்கள் எடுத்த பவன் நெகி, படேல் பந்தை அடிக்கும் முயற்சியில் சஹாவின் ரன்னிங் கேட்சிற்கு அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே பத்ரியும் பவுல்டு ஆனார். பெங்களூரு அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னொரு தோல்வியைச் சந்தித்தது. சந்தீப் சர்மா, அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக சந்தீப் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x