Published : 19 Feb 2023 06:16 AM
Last Updated : 19 Feb 2023 06:16 AM

அக்சர் படேல், அஸ்வினின் சிறப்பான பேட்டிங்கால் 262 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது இந்திய அணி

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81, பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 72 ரன்கள்சேர்த்தனர். இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 4 விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள்ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி21 ரன்கள் எடுத்தது.

கேப்டன் ரோஹித் சர்மா 13, கே.எல்.ராகுல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேதன் லயன் சுழற்பந்து வீச்சில் ஆட்டம் கண்டது. கே.எல்.ராகுல் 17, ரோஹித் சர்மா 32, சேதேஷ்வர் புஜாரா 0, ஸ்ரேயஸ் ஐயர் 4 ரன்களில் நேதன் லயன் பந்தில் நடையை கட்டினர்.

66 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் விராட் கோலி,ரவீந்திர ஜடேஜா ஜோடி போராடியது. 5-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை டாட் மர்பி பிரித்தார். ஜடேஜா 74 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில்மர்பி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.சிறிது நேரத்தில் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான மேத்யூ குனேமன் பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் விராட் கோலி எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

விராட் கோலி 84 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்தார். அவரை தொடர்ந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கர்பரத் 6 ரன்களில் நேதன் பந்தில்தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.139 ரன்களுக்கு 7 விக்கெட்களைஇழந்து இந்திய அணி தவித்த நிலையில் அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி அற்புதமாக பேட் செய்து இன்னிங்ஸை கட்டமைத்தது.

அக்சர் படேல் 94 பந்துகளில் தனது அரை சதத்தை கடந்தார். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. இதன் பின்னர் அக்சர் படேல் ரன்குவிப்பை விரைவு படுத்தினார். 80 ஓவர்களில் இந்திய அணி 252 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்த ஓவரில் புதிய பந்தை எடுத்ததுமே அஸ்வின், அக்சர் படேல் கூட்டணி பிரிந்தது.

அஸ்வின் 71 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் தட்டிய போது மேட் ரென்ஷாவிடம் கேட்ச் ஆனது. 8-வது விக்கெட்டுக்கு அக்சர் படேலுடன் இணைந்து அஸ்வின் 114 ரன்கள் சேர்த்திருந்தார். சிறப்பாக விளையாடி வந்த அக்சர் படேல்115 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தநிலையில் டாட் மர்பி பந்தை விளாசமுயன்றார். ஆனால் பந்து மட்டையில் சரியாக சிக்காமல் மிட் ஆஃன் திசையை நோக்கி பாய்ந்தது.

இதை கண்ணிமைக்கும் நொடியில் பாட் கம்மின்ஸ் கேட்ச் செய்தார்.கடைசி வீரரான மொகமதுஷமி2 ரன்னில் மேத்யூ குனேமன் பந்தில்வெளியேற 83.3 ஓவர்களில் இந்திய அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் நேதன் லயன் 5, மேத்யூ குனேமன், டாட் மர்பி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஒரு ரன் முன்னிலையுடன் 2-வதுஇன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 6 ரன்னில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 39, மார்னஷ் லபுஷேன் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க ஆஸ்திரேலிய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

‘இவருக்கு பதில் அவர்’

டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் பேட் செய்த போது மொகமது சிராஜ் வீசிய பந்து, ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. வார்னர் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டது தெரியவந்ததை அடுத்து போட்டியில் இருந்து வார்னர் விலகியுள்ளார். ஐசிசி விதிமுறையின் படி வார்னருக்குப் பதிலாக மேட் ரென்ஷா சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் 2-வது இன்னிங்ஸில் ரென்ஷா பேட்டிங் செய்வார். ஆனால் அவர், பந்து வீச அனுமதி கிடையாது.

ஆல்ரவுண்டராக அஸ்வின் சாதனை: டெல்லி டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பேட்டிங்கிலும் சிறந்த பங்களிப்பை வழங்கினார். அக்சர் படேலுடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்க உதவினார். சிறப்பாக விளையாடி அஸ்வின் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த இன்னிங்ஸின் போது அஸ்வின் முதல்தர கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களும், 700 விக்கெட்களையும் வீழ்த்திய 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த சாதனையை ஏற்கெனவே வினோ மன்கட், எஸ்.வெங்கட்ராகவன், கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகியோர் நிகழ்த்தி உள்ளனர்.

சர்ச்சையான கோலி அவுட்: டெல்லி டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 44 ரன்களில் இருந்த போது குனேமன் வீசிய பந்தில் தற்காப்பு ஆட்டம் மேற்கொண்டார். அப்போது பந்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பேட் மற்றும் கால்காப்பை தாக்கியது. இதனால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அப்பீல் செய்ய கள நடுவர் நித்தின் மேனன் அவுட் கொடுத்தார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் கோலி.

டி.வி. ரீப்ளேவில் பந்து முதலில் பேட்டில் பட்டதா இல்லை கால்காப்பில் பட்டதா என்பதை காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. எனினும் டி.வி. நடுவர் இல்லிங்வொர்த், கள நடுவரின் தீர்ப்பை உறுதிசெய்தார். இதனால் விராட் கோலி மிகவும் அதிருப்தி அடைந்தார். ஓய்வறையில் தொலைக்காட்சியில், தான் அவுட் ஆன விதத்தைப் பார்த்து தனது அதிருப்தியை அணி வீரர்களிடம் வெளிப்படுத்தினார். முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ட்விட்டரில், “கோலி ஆட்டமிழந்தது தொடர்பான நடுவரின் தீர்ப்பு தவறு. அதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x