Published : 19 Feb 2023 06:22 AM
Last Updated : 19 Feb 2023 06:22 AM

சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் அர்ஜுன், கிளார்க் ஜோடி சாம்பியன்

சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் இரட் டையர் பிரிவில் பட்டம் வென்ற இந்தியாவின் அர்ஜுன் கதே, கிரேட் பிரிட்டனின் ஜெ கிளார்க்.

சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன் கதே கிரேட் பிரிட்டனின் ஜெ கிளார்க் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜுன் கதே, கிரேட் பிரிட்டனின் ஜெ கிளார்க் ஜோடியானது ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னர், குரோஷியாவின் நினோ செர்டருசிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 58 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜுன் கதே, ஜெ கிளார்க் ஜோடி 6-0, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

ஏடிபி சாலஞ்சர் மட்டத்தில் இரட்டையர் பிரிவில் அர்ஜுன் கதே வெல்லும் 4-வது பட்டம் இதுவாகும். அதேவேளையில் ஜெ கிளார்க்கிற்கு இது முதல் பட்டமாக அமைந்தது. ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் 506-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 219-ம் நிலை வீரரான அமெரிக்காவின் நிக்கோலஸ் மோரேனோ டி அல்போரனை எதிர்த்து விளையாடினார்.

ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 4-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல் 6-4, 7-6 என்ற நேர் செட்டில் சகநாட்டைச் சேர்ந்த டேன் ஸ்வீனியை தோற்கடித்தார். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நிக்கோலஸ் மோரேனோ டி அல்போரன், மேக்ஸ் பர்செல் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x