மீனவ இளைஞர்களுக்கு நீச்சல் பயிற்சி: கடலோர பாதுகாப்பு குழுமத்தின் புதிய திட்டம்

மீனவ இளைஞர்களுக்கு நீச்சல் பயிற்சி: கடலோர பாதுகாப்பு குழுமத்தின் புதிய திட்டம்
Updated on
1 min read

மீனவ இளைஞர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கும் புதிய திட்டத்தைக் கடலோர பாதுகாப்பு குழுமம் நேற்று தொடங்கியுள்ளது.

தமிழக மீனவ இளைஞர்கள் 100 பேருக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து, சர்வதேச அளவிலான சான்றிதழ் கொடுக்கும் திட்டத்தைத் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக நேற்று 50 இளைஞர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பயிற்சியை தொடங்கி வைத்தார். மெரினா அருகே உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் இந்தப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கடலோர பாதுகாப்பு குழுமத்தின் உயிர்காக்கும் நீச்சல் வீரர்கள், மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

பயிற்சி முடித்த வீரர்களுக்கு இந்திய உயிர் காக்கும் கூட்டமைப்பின் மூலம் ‘சர்வதேச உயிர் காக்கும் நீச்சல் வீரர்’ என்ற சான்றிதழ் வழங்கப்படும். நீச்சல் குளம், கடலோர பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற இடங்களில் இந்த சான்றிதழ் மூலம் அவர்கள் வேலையில் சேர முடியும்.

நிகழ்ச்சியில், தமிழக கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நீரில் மூழ்கிய இளைஞர்

நீச்சல் பயிற்சிக்கு வந்திருந்த கொடுங்கையூர் சத்யா நகர் முதல் தெருவில் வசிக்கும் சங்கர்(26) என்ற இளைஞர் யாரும் எதிர்பாராத வகையில் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி விட்டார். நீச்சல் வீரர்கள் மற்றும் முதலுதவி குழுவினர் அங்கேயே தயாராக இருந்ததால், சங்கரை உடனடியாக மீட்டு, அவரது உயிரைக் காப்பாற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in