

புதுடெல்லி: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஷமி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்திய அணிக்காக விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தச் சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்காக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வார்னர், 44 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் அப்படியே தட்டித்தட்டி ஆடி வந்தது ஆஸி.
இருந்தும் முதல் இன்னிங்ஸின் 23-வது ஓவர் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரை அஸ்வின் வீசி இருந்தார். மார்னஸ் லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை அந்த ஓவரில் அவுட் செய்தார் அஸ்வின். தொடர்ந்து ஹெட், 12 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் வந்த ஹேண்ட்ஸ்கோம்ப் உடன் 59 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கவாஜா. 125 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அவர் ஜடேஜா சுழலில் சிக்கினார். அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கே.எல்.ராகுல் திறம்பட பிடித்து அசத்தினார். அடுத்த ஓவரில் அலெக்ஸ் கேரி அவுட்டானார்.
கேப்டன் கம்மின்ஸ் உடன் 59 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஹேண்ட்ஸ்கோம்ப். கம்மின்ஸ் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மர்பி, லயன் மற்றும் குனேமன் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்தனர்.
78.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இறுதி வரை ஹேண்ட்ஸ்கோம்ப் அவுட்டாகாமல் இருந்தார். அவர் 142 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்தார்.
முதல் இன்னிங்ஸில் ஷமி (4 விக்கெட்டுகள்), அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 ஓவர்கள் விளையாடி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது இந்தியா. கேப்டன் ரோகித் 34 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்களும், கே.எல்.ராகுல் 20 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்களும் எடுத்துள்ளனர்.