Published : 17 Feb 2023 06:06 AM
Last Updated : 17 Feb 2023 06:06 AM

2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா – ஆஸி. இன்று மோதல்: 100-வது போட்டியில் களமிறங்குகிறார் புஜாரா

சேதேஷ்வர் புஜாரா

புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

நாக்பூர் போட்டியில் மட்டை வீச்சில் கேப்டன் ரோஹித் சர்மா தாக்குதல் ஆட்டத்தையும், பாரம்பரியமான தற்காப்பு ஆட்டத்தையும் சரியான கலவையில் பயன்படுத்தி சதம் விளாசினார். கீழ்வரிசையில் ரவீந்திர ஜடேஜா (70), அக்சர் படேல் (84) ஆகியோர் பேட்டிங்கில் பெரிதும் உதவினர். இதன் காரணமாகவே இந்திய அணியால் 400 ரன்களை எட்ட முடிந்தது.

இவர்களிடம் இருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும் டாப் ஆர்டர் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த தவறினர்.

புஜாராவுக்கு இன்றைய போட்டி சர்வதேச டெஸ்ட் அரங்கில் 100-வது ஆட்டமாகும். இதன் மூலம் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற உள்ளார். 35 வயதான புஜரா இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 34 அரை சதங்கள் என 44.15 சராசரியுடன் 7,021 ரன்கள் குவித்துள்ளார். 100-வது போட்டி என்பதால் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம்வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரேயஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்துள்ளார். இருப்பினும் அவர், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 30 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் போட்டிக்கான உடற்தகுதி விஷயத்தை இந்திய அணி நிர்வாகம் கவனத்தில் கொண்டால் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடும் லெவனில் இடம் பெறுவது சந்தேகம்தான். அவர், களமிறங்காத பட்சத்தில் சூர்யகுமார் யாதவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

அருண் ஜெட்லி ஆடுகளம் நாக்பூர் ஆடுகளத்தைவிட மெதுவாக இருக்கக்கூடும். இதனால் பந்துவீச்சில் மீண்டும் ஒரு முறைரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் சுழல் கூட்டணி ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு கடும் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் டேவிட் வார்னரின் மோசமான பார்ம் கவலை அடையச் செய்துள்ளது. இந்த ஆட்டத்திலும் வார்னர் சிறப்பாக செயல்பட தவறினால் எஞ்சிய இருபோட்டியிலும் அவர், இடம் பெறுவது கடினமே. பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக டிராவிஸ் ஹெட்சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. மிட்செல் ஸ்டார்க் முழு உடற்தகுதியை எட்டும் பட்சத்தில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. அவர், களமிறங்கும் பட்சத்தில் ஸ்காட் போலண்ட் நீக்கப்படுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x