

மும்பை: இந்திய வீரர் விராட் கோலி ரன் சேர்க்க தடுமாறியபோது அவருக்கான ஆதரவை கேப்டன் ரோகித் சர்மா அதிகம் கொடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி மேற்கொண்ட ஸ்டிங் ஆபரேஷனில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
டி20 கேப்டன் பொறுப்பை கோலி துறந்ததும் அவர் வசம் இருந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் பொறுப்புகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பறித்தது. இது குறித்து தனது அதிருப்தியை பகிரங்கமாக கோலி வெளிப்படுத்தினார். அவரது கேப்டன் பொறுப்பு பறிபோக அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலிதான் காரணம் என சொல்லப்பட்டது. இந்தs சூழலில் கங்குலிக்கு கோலியை பிடிக்கவே பிடிக்காது என சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். அதோடு இந்திய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“கோலி ரன் சேர்க்க தடுமாறியபோது அவருக்கு ரோகித் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கி இருந்தார். அது எந்த அளவுக்கு என்றால் அணியில் மற்ற அனைவரும் கொடுத்த ஆதரவை காட்டிலும் அதிகம்” என சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
கோலி, ரன் சேர்க்க தடுமாறிய போது பலரும் அவரை அணியில் சேர்க்கக் கூடாது என விமர்சித்திருந்தனர். அதே நேரத்தில் அவர் நிச்சயம் பழையபடி அபாரமாக ஆடுவார் எனவும் சிலர் ஆதரவாக கருத்து சொல்லி இருந்தனர். இறுதியில் கடந்த 2022 செப்டம்பரில் ஆசிய கோப்பை டி20 தொடரில் சதம் விளாசி அபாரமாக கம்பேக் கொடுத்தார் கோலி. அதோடு தன் மீது நம்பிக்கை வைத்த ரோகித்தின் நம்பிக்கையை காத்திருந்தார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.