

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் கங்குலி - கோலி மோதல், இந்திய அணி தேர்வு, வீரர்களின் உடல் தகுதிக்கு ஊக்க மருந்து எடுத்தது குறித்து பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி - கோலி இடையே மோதல்கள் இருந்து வந்ததாக ஊடகங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வெளியாகின. அதனை உறுதி செய்யும் வகையில் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இந்தச் சூழலில் தனியார் தொலைகாட்சிக்கு சேத்தன் சர்மா அளித்த ரகசிய பேச்சு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில் சேத்தன் சர்மா கூறியதாவது, “கங்குலிக்கு விராட் கோலியின் போக்கு பிடிக்கவில்லை. கோலியும் கங்குலியும் இணக்கமாக இருந்ததில்லை. அதேவேளையில் ரோஹித் சர்மாவை கேப்டனாக்கவும் கங்குலி விரும்பவில்லை . கோலி கிரிக்கெட்டைவிட தன்னை பெரிய ஆளாக நினைத்தார். மேலும் அவர் பிசிசிஐயுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கவில்லை. அவர் இல்லையென்றால் இந்திய கிரிக்கெட் இருக்காது என்று நினைத்தார். ஆனால் அவ்வாறு நடந்ததா? அவர் சென்ற பிறகும் பல இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
20 - 20 கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்யும்போது, நீங்கள் யோசித்து முடிவெடுக்கலாம்..உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறினோம்.கங்குலியும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறினார். ஆனால் கோலி பிசிசிஐ எந்த வாய்ப்பையும் தனக்கு வழங்கவில்லை என்று ஊடகங்களிடம் கூறினார். இதனால் இது பிசிசிஐ vs கோலியாக வெளியில் பேசப்பட்டது. எங்களுடன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் மிக நெருக்கமாக உள்ளனர். ஆனால் கோலி அவ்வாறு இருந்ததில்லை. இதுவே கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது எங்களுக்கு சாதகமாக இருந்தது. காயமடைந்த இந்திய வீரர்கள் சிலர் அணியில் இடம்பெற உடல்தகுதி பெறாத நிலையிலும், ஊக்க மருந்து எடுத்துக் கொண்டு அணிக்கு திரும்பினர்.” என்று பேசி இருக்கிறார். இந்த நிலையில் சேத்தன் சர்மாவின் பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.