Published : 08 May 2017 09:06 AM
Last Updated : 08 May 2017 09:06 AM

மும்பையுடன் இன்று மோதல்: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் அணி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வேண்டுமானால் இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் அணி உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தற்போது 12 போட்டிகளில் ஆடி 13 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணி இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரு துறைகளிலும் சம பலத்தில் இருந்தாலும், கடைசி 2 போட்டிகளில் டெல்லி மற்றும் புனே அணிகளிடம் அடுத்தடுத்து தோற்றதால் கொஞ்சம் நெருக் கடியில் உள்ளது ஹைதராபாத்.

ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை அதன் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவண், வார்னர் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இணையாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுக்காததே, ஹைதரா பாத்தின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே இன்றைய போட்டியில் வென்றாக வேண்டுமென்றால் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடவேண்டியது அவசியம்.

அதே நேரத்தில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள மும்பை அணி, அதிக நெருக்கடி இல்லாமல் இப்போட்டியை சந்திக்கிறது. முதலிடத்தை தக்கவைக்கும் முனைப்பில் உள்ள அந்த அணி, லெண்டில் சிம்மன்ஸ், பொலார்டு, ரோஹித் சர்மா, பார்த்தீவ் படேல், நிதிஷ் ராணா, குருனால் பாடியா, ஹர்திக் பாண்டியா என்று வலுவான பேட்டிங் வரிசையைப் பெற்றுள்ளது. மேலும் மெக்லினகன், ஹர்பஜன் சிங், கரண் சர்மா, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் அந்த அணியில் இருப்பது அதற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. இந்நிலையில் மும்பை அணியை வெல்வது சன் ரைசர்ஸ் அணிக்கு கடுமையான சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x