

சமீபத்திய இந்திய அணியின் வெளிநாட்டு வெற்றிகளில் பெரும்பங்காற்றி உலக வேகப்பந்து வீச்சாளர்களில் தனக்கென ஒரு பாணியையும், ஓர் இடத்தையும் பெற்றவர் முகமது ஷமி. ஆனால், அவரது திருமண வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக இல்லை என்பதோடு, அவரைப் பிரிந்து சென்ற மனைவி ஹசின் ஜகான், ஷமி மீது கண்டபடி குற்றச்சாட்டுகளை சுமத்திய சம்பவங்களும் நடந்தன. இதில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொன்று வரும் வகையிலான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டும் அடங்கும்.
ஷமி தற்போது இந்திய அணிக்கு ஒரு பெரும் சொத்து. ஆனாலும் இந்த உயர்நிலையை அவர் எட்டுவதற்கான அவரது பயணம் எளிதானது அல்ல. தொழில்முறை கிரிக்கெட்டில் ஷமி எப்போதுமே நம்பமுடியாத திறமையான வேகப்பந்து வீச்சாளராகக் காணப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையை சமாளிக்க அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தன.
மனைவி ஹசின் ஜகானுடனான ஷமியின் உறவு முறிந்த பிறகு, அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஷமி 'மேட்ச் பிக்சிங்' செய்ததாக அவரது மனைவி குற்றம் சாட்டினார். இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தியது.
இந்நிலையில், ஆங்கில ஆன்லைன் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இன்னொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, ஷமி மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள், அதன் மீது நடந்த விசாரணை போன்றவைகள் குறித்து பகிர்ந்து கொண்டார்:
“நான் ஷமியுடன் இது குறித்து பேசினேன். அவரும் என்னுடன் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையாளர்கள் எங்களையும் அணுகினர். அவர்கள் எங்களிடம் ஷமி மேட்ச் பிக்சிங் செய்பவரா என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். காவல் துறையினரை போல என்னிடம் அனைத்தையும் விசாரித்தனர். அனைத்தையும் எழுதிக் கொண்டனர். நான் அவர்களிடம் கூறினேன், ‘ஷமியின் சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் தெரியாது. ஆனால் 200% கூறுகிறேன், ஷமி மேட்ச் பிக்சிங் எல்லாம் செய்பவர் அல்ல. ஏனெனில், அவரை எனக்கு நன்றாகத் தெரியும். நான் இப்படி அவரைப்பற்றி கூறியதையடுத்து நான் அவரைப் பற்றி என்ன நினைக்கின்றேன் என்பதை அவர் உணர்ந்தார். எங்களது நட்பும் வலுவடைந்தது” என்றார் இஷாந்த் சர்மா.
பிசிசிஐ விசாரணை முடிவடைந்த நிலையில், ஷமிக்கு வாரியம் ‘க்ளீன் சிட்’ வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஷமி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முற்றிலும் மாறுபட்ட பாதையில் கொண்டு சென்றதைக் கண்டிருக்கலாம், ஆனால் ஷமி தன்னை மீண்டும் கட்டியெழுப்பி இன்று ஒரு பெரிய பவுலராக மாற கடினமாக உழைத்தார் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.
இதன் பிறகுதான் யுஏஇ டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஓவரில் 20 ரன்களை ஷமி கொடுத்ததை அடுத்து அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். கடும் வசைகளை பொழிந்தனர். அதற்கு விராட் கோலி தக்க பதிலடி கொடுத்ததும், அதன் பிறகு பல்வேறு காரணங்களால் விராட் கோலி மூன்று வடிவங்களிலும் கேப்டன்சியை உதற நேரிட்டதும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.