Published : 14 Feb 2023 06:21 AM
Last Updated : 14 Feb 2023 06:21 AM

10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் - தமிழக வீரர், வீராங்கனைகள் 3 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றனர்

பவித்ரா வெங்கடேஷ்

சென்னை: 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் கடந்த 10-ம் தேதி முதல் 12-ம்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்தியாவில் இருந்து 26 பேர் கொண்ட அணி கலந்து கொண்டது.

இந்த தொடரில் இந்தியா ஒரு தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 6-வது இடம் பிடித்தது. ஜப்பான் 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலத்துடன் முதலிடத்தை கைப்பற்றியது. போட்டியை நடத்திய கஜகஸ்தான் 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 2-வது இடம் பெற்றது.

இந்தத் தொடரில் கலந்துகொண்ட இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் 4 பேர் 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம்வென்றனர். மற்ற 3 பேர் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டனர். ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேல் 16.98 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

மகளிருக்கான போல்வால்ட்டில் பவித்ரா வெங்கடேஷ் 4 மீட்டர் உயரம்தாண்டி வெள்ளிப் பதக்கமும், ரோஸி மீனாபால்ராஜ் 3.90 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதில் ரோஸி மீனா, கஜகஸ்தான் புறப்படுவதற்கு முன்னதாக உடல்நல பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும் பதக்க மேடையை அலங்கரித்துள்ளார். பவித்ரா வெங்கடேஷும், ஜப்பானின் மயூ நஸும் 4 மீட்டர்உயரம் தாண்டியிருந்தனர். எனினும் பவித்ரா வெங்கடேஷ் 3.80 மீட்டர் உயரத்தை இரு முயற்சிகளில் தாண்டியிருந்தார். இதையடுத்்து ‘கவுண்ட்பேக்’ அடிப்படையில் மயூ நஸுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.93 மீட்டர் நீளம்தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். 0.5 மீட்டரில் ஆல்ட்ரின் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். சீன தைபேவின் யு-டாங் லின் 8.02 மீட்டர் நீளம் தாண்டி தங்கம்வென்றார். உள் அரங்க தடகள போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாத ஜெஸ்வின் ஆல்ட்ரின் தனது 6 முயற்சிகளில் நான்கை ஃபவுல் செய்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற பெடரேஷன் கோப்பையில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.37 மீட்டர் நீளம் தாண்டியிருந்தார்.

மகளிருக்கான 60 மீட்டர் ஓட்டத்தில் அர்ச்சனா சுசீந்திரன் இலக்கை 7.39 விநாடிகளில் கடந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இந்த பந்தயத்தில் இந்தோனேஷியாவின் வாலன்டைன்வனேசா பந்தய தூரத்தை 7.37 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார். ஆடவருக்கான போல்வால்ட்டில் சிவ சுப்பிரமணியம் 5.15 மீட்டர் உயரம் தாண்டி 5-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் இன்று பிற்பகல் 2.45 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகின்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழக தடகள சங்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x