

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற SA20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி. இறுதிப் போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை 22 பந்துகள் எஞ்சியிருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் அணி.
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் லீக் தொடரை போலவே தென் ஆப்பிரிக்காவிலும் SA20 என்ற ஃப்ரான்சைஸ் லீக் தொடர் தொடங்கப்பட்டது. இதனை அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்தது. இந்த லீக் தொடரில் பங்கேற்று விளையாடிய ஆறு அணிகளையும், ஐபிஎல் அணி நிர்வாகங்கள்தான் வாங்கியிருந்தன. கிரிக்கெட் களத்தில் ஃப்ரான்சைஸ் லீக் தொடர்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருவதும். அதற்கு கிடைத்துள்ள வரவேற்பும், அதில் உள்ள வணிகமும் தான் இந்த தொடர் துவங்கப்பட காரணமாக அமைந்தது.
ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேபிடல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் என ஆறு அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடின. கடந்த ஜனவரி 10-ம் தேதி இந்த தொடர் தொடங்கியது. மொத்தம் 33 போட்டிகள்.
முதல் சீசனின் இறுதிப் போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. 19.3 ஓவர்களில் கேபிடல்ஸ் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி 135 ரன்களில் அந்த அணியை கட்டுபடுத்தியது சன்ரைசர்ஸ். வான்டர் மெர்வ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார்.
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சன்ரைசர்ஸ் அணி விரட்டியது. 16.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. ஆடம் ரோசிங்டன், 30 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். ஜோர்டான் ஹெர்மன் 22 ரன்களும், அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் 26 ரன்களும் எடுத்தனர். மார்க்கோ ஜேன்சன் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வான்டர் மெர்வ் மற்றும் தொடர் நாயகன் விருதை மார்க்ரமும் வென்றனர்.