Last Updated : 18 May, 2017 10:03 AM

 

Published : 18 May 2017 10:03 AM
Last Updated : 18 May 2017 10:03 AM

தோனி, வாஷிங்டன் சுந்தர் அற்புதமாக செயல்பட்டனர்: புனே கேப்டன் ஸ்மித் புகழாரம்

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த புனே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹானே 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்ளும், மனோஜ் திவாரி, 48 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் எடுத்தனர்.

18 ஓவர்களில் புனே அணி 121 ரன்களே சேர்த்தது. ஆனால் கடைசி 2 ஓவர்களில் தோனி தனது அதிரடியால் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அவர் 26 பந்துகளில், 5 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் விளாசியதால் புனே அணியால் வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது. மும்பை அணி தரப்பில் மெக்லீனகன், மலிங்கா, கரண் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 163 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணிக்கு பார்த்தீவ் படேல் அதிரடி தொடக்கம் கொடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை. வழக்கத்துக்கு மாறாக மந்தமாக விளையாடிய அதிரடி வீரரான சிம்மன்ஸ் 13 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். புனே அணிக்கு இது முதல் திருப்புமுனையாக அமைந்தது.

அடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா (1), அம்பாட்டி ராயுடு (0), பொலார்டு (7) ஆகியோரை தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் சாதுர்யமாக ஆட்டமிழக்க செய்தார்.

இதனால் 8 ஓவர்களில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த மும்பை அணியால் சரிவில் இருந்து மீள முடியாமல் போனது. அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 14 ரன்னில் பெர்குசன் பந்தில் நடையை கட்டினார்.

15-வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்குர், கிருணல் பாண்டியா (11), பார்த்தீவ் படேலை (52) வெளியேற்ற புனே அணியின் வெற்றி உறுதியானது. இதை தொடர்ந்து களமிறங்கிய கரண் சர்மா 4, மெக்லீனகன் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்களே எடுத்தது. பும்ரா 16, மலிங்கா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். புனே அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புனே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் தோல்வியை தழுவிய மும்பை அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. அந்த அணி இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் வரும் 19-ம் தேதி தகுதி சுற்றில் 2-ல் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப் போட்டியில் கால்பதிக்கும்.

வெற்றி குறித்து புனே அணியின் கேப்டன் ஸ்மித் கூறும்போது, “இந்த சீசனில் நாங்கள் மும்பை அணியை 3 முறை தோற்கடித்துள் ளோம். ஆட்டத்தை மோசமாக தொடங்கினாலும் சரியான நேரத்தில் 162 ரன்களை சேர்த்தோம். தோனி மிக அற்புதமாக விளையாடினார். வெற்றியின் தருணத்தை நாங்கள் பெற்றுள்ளோம். பெரிய அளவிலான தொடர்களில் இது போன்று சரியான நேரத்தில் உச்சக் கட்டத்தை அடைய வேண்டும்.

எங்களது திட்டங்களை களத்தில் சரியாக செயல்படுத்தினோம். இந்த தொடரில் பந்து வீச்சில் சீரான வேகத்தை பயன்படுத்த முயற்சி செய்தோம். அது இந்த ஆட்டத்தில் கைகொடுத்தது. பனிப்பொழிவு இருந்த போதும் பந்தை சரியாக பிடித்து வீச முடிந்தது.

மும்பை அணியை ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டோம். வாஷிங்டன் சுந்தர், சரியான நீளத்தில் அபாரமாக பந்து வீசினார். தொடரின் முக்கியமான கட்டத்தில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது. பல்வேறு ஆட்டங்களில் எங்களுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ள அவரால் பெருமையாக உள்ளது” என்றார்.

தோல்வி குறித்து மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறும் போது, “163 ரன்கள் இலக்கு என்பது இந்த மைதானத்தில் அடையக் கூடியதுதான். இந்த சீசனில் எங்களது மோசமான பேட்டிங் இதுதான். போதுமான வகை யில் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைய வில்லை.

மேலும் புனே அணி சிறப் பாக பந்துவீசி எங்களை கட்டுப் படுத்தியதுடன் மிடில் ஓவர்களில் விக்கெட்களையும் கைப்பற்றினர். அதேவேளையில் ஷாட் தேர்வும் மிக முக்கியமானது. மேலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிலைமை களை புரிந்து கொண்டும், எதிர ணியை மதித்தும் செயல்பட வேண்டும். இத்துடன் எங்களுக்கான உலகம் முடிந்துவிடவில்லை. எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப் புள்ளது. அதை சரியாக பயன் படுத்திக் கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x