

கேப் டவுன்: ஐசிசி மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று மாலை 6.30 மணி அளவில் தென் ஆப்பிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய மகளிர் அணி சமீபத்தில் முத்தரப்பு டி 20 தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்திருந்தது. மேலும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் வங்கதேசத்தை வென்றிருந்தது. கேப்டன் ஹர்மான் பிரீத் கவுர், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோர் காயத்தில் இருந்து குணமடையாததால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம்தான்.
பேட்டிங்கில் ஷபாலி வர்மா, ரிச்சா கோஷ் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பந்து வீச்சில் ரேணுகா சிங், ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ரகர் பலம் சேர்க்கக்கூடும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் நிடா தார் கவனிக்கத்தக்க வீராங்கனையாக இருப்பார். அந்த அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடிய நிலையில் உலகக் கோப்பை தொடரை அணுகுகிறது.