டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள், 450 விக்கெட்டுகளுடன் ‘ஒரே ஆசிய வீரர்’ அஸ்வின் புதிய சாதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வின் | படம்: பிசிசிஐ
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வின் | படம்: பிசிசிஐ
Updated on
1 min read

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரியை அவுட் செய்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்வின். அதோடு, ஆசிய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000+ ரன்கள் எடுத்து, 450+ விக்கெட்டுகளை வசப்படுத்திய ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இந்திய அளவில் முதல் இடத்தில் முன்னாள் வீரர் கும்ப்ளே உள்ளார். 132 போட்டிகளில் விளையாடி மொத்தம் 619 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். அதேபோல இந்த சாதனையை குறைவான போட்டிகளில் விளையாடி விரைந்து எட்டிய இரண்டாவது வீரராகவும் உள்ளார் அஸ்வின். இது அவர் விளையாடும் 89-வது டெஸ்ட் போட்டி. இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் 80 போட்டிகளில் இதைச் செய்திருந்தார்.

பந்துகளின் எண்ணிக்கையிலும் அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். மொத்தம் 23,635 பந்துகளை வீசி இந்தச் சாதனையை அவர் எட்டியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெக்ராத், டெஸ்ட் கிரிக்கெட்டில் 23,474 பந்துகளில் இந்தச் சாதனையை எட்டியவர்.

36 வயதான அஸ்வின் கடந்த 2011-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார். முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றவர். 9 முறை டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பவுலர், 2-வது இடத்தில் உள்ள ஆல் ரவுண்டராகவும் அஸ்வின் உள்ளார். இப்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பேட் செய்ய களம் இறங்கியுள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 பந்துகளை எதிர்கொண்டிருந்தார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in