Published : 09 Feb 2023 11:46 AM
Last Updated : 09 Feb 2023 11:46 AM

பிட்சைப் பற்றி ஏன் பேசக்கூடாது? ஆடுகளத்தின் சில பகுதிகளை வேண்டுமென்றே திருத்தலாமா?

நாக்பூர் பிட்ச் பற்றி கடும் விமர்சனங்கள் ஏற்கெனவே எழுந்துள்ள நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ‘கவனம் ஆட்டத்தில் இருக்க வேண்டுமே தவிர ஆடுகளத்தில் அல்ல’ என்று அறிவுக்குப் பொருந்தாத ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். பிட்ச் எப்படி என்று தெரிந்தால்தான், கணித்தால்தான் வீரர்களைத் தேர்வு செய்ய முடியும். உத்திகள் வகுக்க முடியும். இதெல்லாம் ரோஹித் சர்மாவுக்குத் தெரியாதா என்ன? இப்படி ஒன்றை பொத்தாம் பொதுவாகச் சொல்லி வைத்தால் சமூக ஊடகங்களில் இந்திய கிரிக்கெட்டை மட்டுமே வெறித்தனமாக ரசிக்கும் ரசிகர்கள் ‘வெல் செட்’, சூப்பர் என்றெல்லாம் லைக்குகளும் வரவேற்புகளும் எகிறும்.

ஆனால் உண்மை என்னவெனில் எல்லோரும் ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துவார்கள், ஆனால் அதற்குப் பிட்ச் பற்றிய அறிவும் வேண்டும். நம்மூர் கே.எல்.ராகுல் வங்கதேசத்தில் கூறினாரே ‘பிட்ச் பற்றி எனக்குத் தெரியாது, அதைக் கணிக்க உள்ளே பண்டிதர்கள் உள்ளனர்’ என்றாரே!! இதை எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு கேப்டன், களத்தில் இயங்கும் கேப்டன், களவியூகம் அமைக்கும் கேப்டன், அணித்தேர்வு செய்யும் கேப்டன், பந்து வீச்சு மாற்றம் செய்யும் கேப்டன் பிட்ச் பற்றி எனக்குத் தெரியாது என்று கூறும் போக்கைத்தான் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியர்களுக்கும் அறிவுறுத்துகிறாரா? அப்படியென்றால் இதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படியே பாட் கமின்ஸும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ‘சாரி ரொம்ப ஓவர்’ இல்லையா?

முதல் டெஸ்ட் நடைபெறும் நாக்பூர் டெஸ்ட்டுக்கு வருவோம். ஒரு முனையை மட்டும் இடது கை ஸ்பின்னர்களுக்குச் சாதகமாக மண் மயமாக வைத்து, வறட்சியாக வைத்து ‘பிட்ச் டாக்டரிங்’ செய்வது வங்கதேசம், இலங்கை, இந்தியா தவிர வேறு எங்காவது நடக்கின்றதா? உடனே கிரீன் டாப் என்று கூறக்கூடாது, கிரீன் டாப் பிட்சில் நாம் போய் வெல்ல முடிகிறதே. ஆனால் இங்கு 15 தொடர்களாக எந்த அணியும் வெல்ல முடியவில்லை எனில் அது ‘திறமை’ சம்பந்தப்பட்டதல்ல, திறமை என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்ற முடியாது. நிச்சயம் பிட்ச் ஒரு முனையிலோ இருமுனையிலுமோ டாக்டரிங் செய்யப்பட்டு குறிப்பிட்ட ஸ்பின்னர்களுக்கு சாதகமாகச் செய்யப்படுவது நீண்ட காலமாக இங்கு நடந்து வருகிறது.

ஒரு முறை ஷேன் வார்ன் அச்சுறுத்தல் காரணமாக அவர் பந்தை பிட்ச் செய்யும் இடங்களில் மட்டும் சென்னையில் அதிகம் தண்ணீரை விட்டு விட்டு ஈரப்பதத்துடன் தொடர்ந்து நீடித்திருக்குமாறு செய்தனர். ஏனெனில் அந்த இடம் வறண்டிருந்தால் ஷேன் வார்ன் இந்திய அணியை காலி செய்து விடுவார் என்றுதான். இது நீண்ட காலமாக நடந்து வருகின்றது.

இத்தகையப் பிட்ச்களைப் போட்டு விட்டு ‘ரியல் டெஸ்ட்’, இங்கு விளையாட பேட்டர்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுமை, லாவகம், திறமைகள் வேண்டும் என்று சப்ஜெக்டிவ் ஆக மாற்றுவது சாமர்த்தியப் பேச்சுதானே தவிர வேறு அல்ல. உண்மையான ஸ்பின் பிட்சை 2012ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா போட்டது, ஆனால் அப்போது இங்கிலாந்தின் மாண்ட்டி பனேசர், கிரகாம் ஸ்வான் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றனர். இதைக் கருத்தில் கொண்டுதான் அதன்பிறகு வந்த தொடரில் பிட்ச் டாக்டரிங் செய்தனர். அது 2 முறை இந்தியாவுக்கு எதிராக முடிந்தது. 2017 தொடரில் ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட்டில் வென்று அதிர்ச்சியளித்தது, பிறகு சென்னையின் படுமட்டமான பிட்சில் ஜோ ரூட் இரட்டைச் சதம் அடிக்க இந்திய அணி தோல்வி தழுவியது, மற்ற போட்டிகளில் எல்லாம் இந்திய அணி வென்றது.

ஒருமுறை ஸ்ரீகாந்த் பிட்ச் இயக்குநராக இருந்த போது சச்சின் டெண்டுல்கர் கேப்டன்சியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் பந்திலிருந்தே ஸ்பின் ஆக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது, சச்சினே அந்தக் கோரிக்கையை வைத்ததாக ஸ்ரீகாந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் ஸ்ரீகாந்த் என்ன கூறினார் என்றால் வேண்டாம் சச்சின் அது நம்மாளுங்களுக்கே எதிரா முடியும்’ என்றார் ஆனால் சச்சின் கேட்கவில்லை. கடைசியில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்று வெற்றி பெற்றது, சச்சின் கேப்டன்சியைத் துறந்தார். ஆனால் அவையெல்லாம் ஸ்பின் பிட்ச்கள். ஆனால் ‘பிட்ச் டாக்டரிங்’ என்பது 2013க்குப் பிறகு இந்தியாவில் எந்த அணியும் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் போனதன் பின்னணியில் உள்ளது என்பதுதான் சரியான பார்வை.

இப்போது நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இடது கை ஸ்பின்னர்களான ஜடேஜா, அக்சர் படேல் தொடக்கத்திலேயே வந்து வீசினர், மாறாக உண்மையான அச்சுறுத்தலான ஆஃப் ஸ்பின் அஸ்வின் 22வது ஓவரில்தான் வீச வந்தார். அதாவது ஆஸ்திரேலியாவில் இடது கை பேட்டர்கள் அதிகம் என்று இடது கை பேட்டர்களை முடக்க ஒரு முனையை வறட்சியாக வைத்து விட்டு ‘ரஃப்’ பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்பது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பிட்ச் டாக்டரிங் என்பதே. இதனை மறுக்க முடியாது. இப்படி நடக்கும் போது பிட்சை பற்றி பேசாதீர்கள், ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள் என்று ரோஹித் சர்மா கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பரத் சுந்தரேசன் என்ற ட்விட்டர் வாசி தன் ட்விட்டர் பக்கத்தில் இதனை அம்பலப்படுத்திக் கூறும்போது, “நாக்பூரில் பிட்ச் தயாரிப்பதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், நடு பிட்ச் நன்றாக தண்ணீர் ஊற்றப்பட்டு பராமரிக்கப்பட்டது, மேலும் இடது கை பேட்டர்களின் லெக் ஸ்டம்ப்புக்கு வெளியேயான லெந்த் பகுதி தண்ணீர் ஊற்றப்பட்டு ஈரப்பதமாக வைத்துக் கொள்ளப்பட்டது. ரோலர் போடுவதும் நடுப்பிட்சில் மட்டுமே போடப்பட்டு உருட்டப்பட்டது. மாறாக இரு முனைகளின் பந்து பிட்ச் ஆகும் லெந்த் பகுதிகளில் ரோலர் செல்லவே இல்லை” என்று கூறுகிறார். இதனை எப்படி புரிந்து கொள்வது? ஆகவே பந்துகள் பிட்ச் ஆகும் பகுதிகளை வேண்டுமென்றே வறட்சியாக வைத்து ஆஸ்திரேலிய இடது கை பேட்டர்களை சடுதியில் வீழ்த்த, இடது கை ஸ்பின்னர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே பந்துகள் திரும்ப வேண்டும், எழும்ப வேண்டும் சில வேளைகளில் தாழ்வாக வேண்டும் என்று பிட்ச் போடப்பட்டுள்ளது. எனவே விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, ‘ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள், ஆடுகளத்தில் அல்ல’ என்பது தவறான அணுகுமுறை என்பதோடு திசைத்திருப்புவதுமாகும்.

ஐசிசி இதிலெல்லாம் தலையிட முடியாது. உண்மையில் தலையிட வேண்டும் ஆனால் தலையிட முடியாததற்குக் காரணம் இந்தியாவிலிருந்துதான் 70-75% வருமானம் ஐசிசிக்கு கிடைக்கிறது, எனவே ஐசிசி மவுனியாகத்தான் இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x