

சென்னை: யுடிடி 84-வது மாநிலங்களுக்கு இடையிலான யு-17, யு-19 தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை (8-ம் தேதி) தொடங்குகிறது. இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆதரவுடன் இந்த போட்டியை தமிழக டேபிள்டென்னிஸ் சங்கம் நடத்துகிறது. 15 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தேசிய சாம்பியன்ஷிப்பை தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம்நடத்துகிறது. வரும் 16-ம் தேதி வரைநடைபெறும் இந்தத் தொடரில்30 மாநிலங்கள், நிறுவனங்களைச்சேர்ந்த 1300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர்.
அணிகள் பிரிவு, தனிநபர், இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் இருந்து அணிகள் பிரிவில் 16 பேரும், சிறுவர் பிரிவில் 15 பேர், சிறுமியர் பிரிவில் 15 பேர் கலந்துகொள்கின்றனர். இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.6.6 லட்சம் ஆகும். இரு பாலருக்கான யு-19 பிரிவில் சாம்பியன் பட்டம்வெல்பவருக்கு தலா ரூ.72 ஆயிரம்மற்றும் பதக்கம் பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.36 ஆயிரமும், அரை இறுதியில் தோல்வி அடைபவர்களுக்கு ரூ.19 ஆயிரமும், கால் இறுதி சுற்றுடன் வெளியேறுபவர்களுக்கு ரூ.8 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
அதேவேளையில் இரு பாலருக்கான யு-17 பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு தலா ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. நாளை மாலை 5 மணி அளவில் தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
இத்தகவலை தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் டி.தேவநாதன், செயலாளார் ஏ.வி.வித்யாசாகர், துணை தலைவர் முரளிதர ராவ், போட்டி ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.