Published : 06 Feb 2023 06:31 PM
Last Updated : 06 Feb 2023 06:31 PM
பாகிஸ்தான் அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில், குறிப்பாக டி20 மிடில் ஆர்டர் பேட்டர் இப்திகார் அகமத் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
வஹாப் ரியாஸ் சாதாரண பவுலர் அல்ல. இடது கை வேகப்பந்து வீச்சில் 2015 உலகக் கோப்பையின்போது ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுக்கு அவர் வீசிய அத்தனை பந்துகளும் பயங்கரமானவை. ஷேன் வாட்சன் அன்று அடி வாங்காமல் தப்பியது அவரின் அதிர்ஷ்டம்தான். முதல் தர கிரிக்கெட் அனைத்திலும் சேர்த்து 735 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர். புள்ளிவிவரங்கள் கூறுவதை விட மிகச் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்.
ஆனால், அவருக்கு இப்போது வயது 37 ஆகிவிட்டது. இருந்தாலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்றும் அவர் ஓர் அச்சுறுத்தல்தான். ஆனால், அவரையே இப்திகார் அகமத் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசியதுதான் ஆச்சரியம்.
நேற்று பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டித் தொடருக்கான காட்சிப் போட்டி நடைபெற்றது. இதில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆடிய இப்திகார், வஹாப் ரியாஸ் ஆடிய பெஷாவர் ஜலாமி அணிக்கு எதிராக 6 சிக்சர்களை ஒரே ஓவரில் அடித்து சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
42 பந்துகளில் அரைசதத்தை எட்டியிருந்த இப்திகார் அகமத், வஹாப் ரியாஸ் வீசிய 20வது ஓவரில் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அப்போது சற்றும் நம்ப முடியாத ஆக்ரோஷத்தில் சிக்சர்கள் மைதானம் நெடுகப் பறந்தன. கடைசி 2 சிக்சர்கள் தேர்ட் மேன் பவுண்டரிக்குப் பறக்க ஒரே ஓவரில் 6 சிக்சர்கள், அதுவும் வஹாப் ரியாஸ் பந்து வீச்சில்.
இதற்கு முன்பாக கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, ஹெர்ஷல் கிப்ஸ் (முதன் முதலில் சர்வதேச ஒருநாள் போட்டியில் 2007 ஐம்பது ஓவர் உலகக் கோப்பையில் கிப்ஸ் 6 சிக்சர்களை ஒரே ஓவரில் விளாசினார்), யுவராஜ் சிங், ராஸ் ஒயிட்லி, ஹஸ்ரத்துல்லா சசாய், லியோ கார்டர், கிரன் பொல்லார்ட், திசரா பெரேரா ஆகியோர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசியுள்ளனர்.
Iftikhar goes big in the final over of the innings!
Watch Live https://t.co/xOrGZzkfvl pic.twitter.com/CDSMFoayoZ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT