Published : 06 Feb 2023 04:00 PM
Last Updated : 06 Feb 2023 04:00 PM

“36-க்கு ஆல் அவுட்; வியாழக்கிழமை தொடங்கும் BGT தொடர்” - வார்த்தைகளால் வம்பிழுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா

அடிலெய்ட் டெஸ்ட் போட்டி | கோப்புப்படம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை (BGT) டெஸ்ட் தொடர் வரும் வியாழன் அன்று தொடங்கவுள்ளது. அதை குறிப்பிடும் வகையில் கடந்த முறை இதே தொடரில் இந்திய அணியின் மோசமான செயல்பாட்டை ஹைலைட் செய்து வார்த்தைகளால் வம்பிழுத்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. அதுவும் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இதை செய்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் களத்தில் பலப்பரீட்சை செய்யும் போதெல்லாம் ஆட்டத்தில் அனல் பறக்கும். இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடினால் அது பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் மட்டும்தான். கடந்த 1996 முதல் இந்தத் தொடர் ஆலன் பார்டர் மற்றும் சுனில் கவாஸ்கர் பெயரை சேர்த்து பார்டர் - கவாஸ்கர் கோப்பை என அறியப்படுகிறது.

களத்தில் கிளாசிக் கிரிக்கெட் ஆட்டத்தால் மட்டுமல்லாது வார்த்தைகளால் வம்பிழுக்கும் வார்த்தைப் போர்களும் அதிகம் இருக்கும். கடந்த முறை இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்றபோது டிம் பெய்ன் மற்றும் ரிஷப் பந்த் இடையிலான வார்த்தை விளையாட்டை சொல்லலாம். அது ஸ்டெம்ப் மைக்கிலும் பதிவாகி இருந்தது. அதுபோல அதற்கு முன்னரும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஹர்பஜன் சிங் மற்றும் சைமண்ட்ஸ் இடையிலான வார்த்தை மோதலையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இந்த முறை இந்தத் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் முகாமிட்டுள்ளது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் இந்தத் தொடரில் விளையாடப்பட உள்ளது. முதல் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் துவங்குகிறது.

ஆனால், தொடரில் முதல் பந்து கூட இன்னும் வீசப்படாத நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட், முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வம்பிழுக்கும் வகையில் பேசி வருகின்றனர். நடப்பு தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித், பயிற்சி ஆட்டத்தை தங்கள் அணி தவிர்த்ததுக்கு சொன்ன காரணம் இதன் தொடக்கப்புள்ளி என்றும் சொல்லலாம்.

“பயிற்சி ஆட்டத்திற்கு ஒரு வகையான பிட்ச் கொடுப்பார்கள். போட்டியில் வேறொரு பிட்ச் கொடுப்பார்கள். அதற்கு நாங்கள் ஏன் அதில் விளையாட வேண்டும்” என சொல்லி இருந்தார். இதற்கு இந்திய அணி வீரர் அஸ்வின் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்திருந்தார். அதோடு இந்திய அணி ஏன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவது இல்லை என்றும் அவர் விளக்கமாக சொல்லி இருந்தார்.

“வழக்கமாக இந்திய ஆடுகளங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்கத்தில் பேட்டிங் செய்ய உதவும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சுழலுக்கு சாதகமாக விக்கெட் மாறும். அது போன்ற ஆடுகளம் நியாயமான முறையில் அமைக்கப்பட்டால் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும்” என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஹீலி இந்திய ஆடுகளங்கள் குறித்து சர்ச்சையயாக பேசி இருந்தார்.

கிரேக் சேப்பல், இந்தத் தொடரை வெல்லும் அணி குறித்து பேசியிருந்தார். ரிஷப் பந்த் மற்றும் பும்ரா போன்ற முக்கிய வீரர்களின் காயங்களால் இந்திய கிரிக்கெட் அணி இம்முறை பாதிக்கப்படும் என்பதால், வரவிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல முடியும் என அவர் சொல்லி இருந்தார். ஆனாலும் அது பொதுவான பார்வையில் சொல்லப்பட்ட கருத்தாகவே இருந்தது.

இந்தச் சூழலில் இப்போது கடந்த 2020-21-ல் இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்ற போது டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இருந்தபோதும் அந்த முறை அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை குறிப்பிட்டு 2023 டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது. அதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. ‘தொடரை யார் வென்றது என சொல்லவில்லையே’ என கேட்டுள்ளார்.

இந்திய அணி இந்தத் தொடரை வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-17, 2018-19, 2020-21 என மூன்று தொடர்களையும் இந்தியாதான் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2014-15-ல் இந்த தொடரை வென்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x