

ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இருமுறை சாம்பியனான கொல்கத்தா அணி, ஹைதராபாத், புனே அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்ததால் நெருக்கடியை சந்தித்துள்ளது. அந்த அணி 11 ஆட்டத்தில் 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சிய 3 ஆட்டங்களில் இரு வெற்றிகளை பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா களமிறங்குகிறது.
இந்த சீசனின் முதல்கட்டத்தில் பெங்களூரு அணிக்கு 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தது. ஈடன்கார்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 132 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் பெங்களூரு அணி 49 ரன்களில் சுருண்டு அவமானகரமான தோல்வியை சந்தித்திருந்தது.
மேலும் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையையும் பெங்களூரு அணி நிகழ்த்தியது. கொல்கத்தா அணி மீண்டும் அதேபோன்றதொரு ஆதிக்க ஆட்டத்தை விளையாட முயற்சிக்கும்.
கொல்கத்தா அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் வலுவான மும்பை, எழுச்சி கண்டுள்ள பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இதில் மும்பை அணி ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விட்டது. பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி உள்ளதால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
இதனால் கொல்கத்தா அணி, பலவீனமான பெங்களூரு அணிக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் இழந்த பார்மை மீட்கக்கூடும் என கருதப்படுகிறது. கொல்கத்தா அணி தனது கடைசி ஆட்டத்தில், ராகுல் திரிபாதியின் அதிரடி ஆட்டத்தால் புனேவிடம் தோல்வி கண்டிருந்தது.
கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் 155 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சோபிக்க தவறினர். கிராண்ட் ஹோம், மணீஷ் பாண்டே ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் நம்பிக்கை அளித்தனர். காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத ராபின் உத்தப்பா இன்று களமிறங்குவதால் அணியின் பேட்டிங் கூடுதல் வலுவடையும்.
சுனில் நரேன், கவுதம் காம்பீர் ஜோடி கடந்த இரு ஆட்டங்களில் சிறப்பான தொடக்கம் கொடுக்க தவறினர். இந்த ஜோடியிடம் இருந்து இன்று சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். யூசுப் பதான் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை.
இதனால் அவர் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டத்தில் உள்ளார். சிறந்த திறனை வெளிப்படுத்த தவறிய ஷெல்டன் ஜாக்சனுக்கு பதிலாக ஜார்கண்டை சேர்ந்த இஷாங்க் ஜக்கிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என தெரிகிறது.
பெங்களூரு அணிக்கு இந்த சீசன் கடும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. அந்த அணி 12 ஆட்டத்தில் விளையாடி 5 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும் இந்த சீசனில் பெங்களூரு அணி 4 முறை எதிரணியினரால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடி வீரர்கள் என தம்பட்டம் அடிக்கப்பட்ட கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், விராட் கோலி, வாட்சன், கேதார் ஜாதவ் ஆகியோர் ஒட்டுமொத்த பேட்டிங்கில் சோடை போனதே பெங்களூரு அணியின் வீழ்ச்சிகளுக்கு காரணமாக அமைந்தது. தொடரை முடிக்கும் நிலையில் உள்ளதால் ரசிர்களை உற்சாகப்படுத்துவதற்காக இவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிக்கக்கூடும் என கருதப்படுகிறது.
அணிகள் விவரம்:
கொல்கத்தா: கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஷான் வாட்சன், கிறிஸ் கெய்ல், ஸ்ரீநாத் அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக். நேரம்: மாலை 4
இடம்: பெங்களூரு
நேரடிஒளிபரப்பு: சோனி சிக்ஸ்