

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் கடந்த டிசம்பரில் வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 210 ரன்கள் விளாசி மிரட்டி இருந்தார். ஆனால், அடுத்த 52 நாட்களில் அவர் பங்கேற்று விளையாடிய 9 சர்வதேச போட்டிகளில் (டி20 மற்றும் ஒருநாள்) மொத்தமாக வெறும் 94 ரன்கள் மட்டுமே எடுத்து படு மோசமாக சொதப்பி உள்ளார்.
இத்தகைய சூழலில் அவர் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ளார். இதில் டெஸ்ட் அணியில் நெடுநாட்களாக வாய்ப்புக்காக காத்திருக்கும் மற்றொரு விக்கெட் கீப்பரான கே.எஸ்.பரத்தின் வாய்ப்பை அவர் தட்டி பறித்து விடுவாரோ என்ற சந்தேகம் வேறு எழுந்துள்ளது. அது குறித்து ரசிகர்களும் பேசி வருகின்றனர்.
அதிரடி இரட்டை சதம்: கடந்த டிசம்பர் 10-ம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக 126 பந்துகளில் 200 ரன்களை பதிவு செய்து அசத்தி இருந்தார் கிஷன். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதமாக உள்ளது. இதன் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனையை தகர்த்தார். அதோடு இந்திய கிரிக்கெட் அணியில் ஷார்டர் பார்மெட்டில் தனக்கான இடத்தையும் பிடித்தார்.
அவரது அந்த அபார இன்னிங்ஸை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் என பலரும் போற்றி புகழ்ந்தனர். நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இஷான் கிஷன், இந்திய அணியின் தொடக்க வீரராக களம் காண வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ சொல்லியிருந்தார்.
அதே நேரத்தில் அதற்கு ஆட்டத்தில் கன்சிஸ்டன்ஸி, உடற்திறன் போன்றவையும் அவருக்கு மிகவும் அவசியம் என அடிகோடிட்டு பிரெட் லீ அப்போது சொல்லி இருந்தார். மேலும், இது நடந்தால் ரோகித் உடன் உலகக் கோப்பை தொடரில் தொடக்க ஆட்டக்காரராக கிஷன் களம் காண அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.
சொதப்பல் ஆட்டம்: இருந்த போதும் அடுத்து அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை வீண் அடித்தார். இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள், நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் முறையே 37, 2, 1, 5, 8, 17, 4, 19 மற்றும் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார்.
இதே நேரத்தில் மற்றொரு இளம் வீரரான சுப்மன் கில், இந்த 9 போட்டிகளில் தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறி இருந்தாலும் அப்படியே அதை ஷிப்ட் செய்து ரன்களை கிடுகிடுவென குவித்தார்.
வரும் நாட்கள் எப்படி? விரைவில் கே.எல்.ராகுல் அணிக்குள் திரும்பும் பட்சத்தில் இஷான் கிஷனுக்கான வாய்ப்பு என்பது முழுவதுமாக அடைக்கப்படலாம். அவரிடமிருந்து விக்கெட் கீப்பர் பொறுப்பையும் ராகுல் பெறலாம். அதே நேரத்தில் அவர் நேரடியாக பிரித்வி ஷா உடன் தனக்கான வாய்ப்பிற்காக போராட வேண்டி இருக்கும். ஷாவும் உள்ளூர் அளவிலான கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்திய அணி நிர்வாகம் வீரர்கள் பார்முக்கு திரும்ப போதுமான அவகாசம் கொடுக்கும். அதை கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம். இருந்தாலும் பயிற்சியாளர் ராகுல் திராவிட் மற்றும் குழுவினர் மீண்டும் ஒருமுறை ஐசிசி தொடரில் தோல்வியை தழுவ விரும்பமாட்டார்கள். அதனால் கிஷன் தனக்கான வாய்ப்பை பயன்படுத்தி தடுமாறாமல் ரன் சேர்க்க வேண்டும். அது சர்வதேச, உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டாக கூட இருக்கலாம். இல்லையேல் அணியில் அவருக்கான இடம் என்பது இல்லாமல் கூட போகலாம்.