Published : 31 May 2017 08:54 PM
Last Updated : 31 May 2017 08:54 PM

எங்களை வெளிப்படுத்திக் கொள்ள சுதந்திரம் அளித்தவர்தான் அனில் கும்ப்ளே: ஆர்.பி.சிங் பேட்டி

கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதையடுத்து அனில் கும்ப்ளே கேப்டன்சியில் ஆடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் கும்ப்ளே தலைமை பற்றி உடன்பாட்டுத் தன்மையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

கும்ப்ளே மீது வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியாக விராட் கோலி கூறியதாக வந்த செய்திகளில் ஒன்று கும்ப்ளே வீரர்களுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை என்பதாகும். இந்நிலையில்,

விளையாட்டு இணையதளம் ஒன்றுக்கு ஆர்.பி.சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பயிற்சியாளர்-கேப்டன் ஆகியோருக்கிடையேயான மோதல் என்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அணியின் முக்கியத்துவம் கருதி இருவடையேயும் பரஸ்பர நம்பிக்கை நிலவ வேண்டும் என்பது முக்கியம்.

விளையாடும் 11 வீரர்களை கேப்டன் முடிவு செய்ய வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை, ஆனால் ஒரு பயிற்சியாளருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பலதரப்பட்ட வீரர்களின் திறமைகள் குறித்த தகவல்கள் வரும்போது பயிற்சியாளரின் சிந்தனைக்கும் கேப்டன் இடமளிக்க வேண்டும். பயிற்சியாளரின் சிந்தனைக்கு எப்போதும் கனம் அதிகம் காரணம் உள்நாட்டுக் கிரிக்கெட்டின் நிலவரங்களிலிருந்து அவர்களுக்கு புதிய வீரர்கள் பற்றிய தகவல்கள் வந்தவண்ணம் இருக்கும்.

விராட் கோலி, அனில் கும்ப்ளே கருத்து வேறுபாடு பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் அனில் கும்ப்ளே தலைமையில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஆடியுள்ளேன், அதே போல் கோலி தலைமையில் ஆர்சிபி அணிக்கும் ஆடியுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை நான் விளையாடியதிலேயே அனில் கும்ப்ளேதான் சிறந்த கேப்டன். 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது அவரது கேப்டன்சியும் தலைமைத்துவமும் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நானும் ஒரு பவுலராக முன்னேறியதற்கு கும்ப்ளேயின் கீழ் ஆடியதும் ஒரு முக்கிய காரணமாகும்.

அவரே ஒரு பவுலர் என்பதால் பவுலர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர் அவர். உத்திகள் வகுப்பதில் அவர் மிகவும் அபாரமானவர். எப்போது முழு வெற்றியை நோக்கி ஆட்டத்தை உந்தித் தள்ள வேண்டும் என்பதை துல்லியமாக அறிந்திருப்பவர். நான் அவருடன் பேசியுள்ளேன், நிறைய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறேன், அவர் அதற்கு செவிமடுப்பார், ஆனால் சில கருத்துகளை அவர் ஏற்கமாட்டார். ஆனால் அதற்காக அந்த கருத்தை அவர் ஒதுக்கித் தள்ளி விடவும் மாட்டார். ஆனால் நாம் ஏன் புதிதாக ஒன்றை முயற்சி செய்யக்கூடாது என்று சிந்திப்பதற்கு அவரிடம் நிறைய காரணங்கள் இருந்தன.

அவர் தனது ஆட்டத்திறமையினாலும் அணியின் வெற்றிக்காக அவர் பாடுபடுபவர் என்பதாலும் அனைவரின் மரியாதையும் அவர் பெற்றிருந்தார். அவர் மூத்த வீரர் மட்டுமல்ல அவரது சில உத்திகள், சிந்தனைகளால் அணி வெற்றியை ஈட்டியுள்ளது.

அணி வீரர்கள் கூட்டத்திலும் ஒவ்வொரு வீரரும் தங்கள் கருத்தை தெரிவிக்க அவர் சுதந்திரம் அளிப்பவராகவே இருந்தார்.

ஆகவே எனக்கு இதை வைத்துப் பார்க்கும் போது தற்போதைய செய்திகள் ஆதாரமற்ற வதந்திகள் போலவே படுகின்றன. நான் அவர் தலைமையில் ஆடும்போது வீரர்களை முடக்குவார் என்ற பேச்சுக்கே இடமில்லை. அனில் கும்ப்ளேயின் பங்கு அபரிமிதமானது.

களத்தில் நாங்கல் தனிப்பட்ட முறையில் முடிவுகள் எடுத்து அது பயன் தருமெனில் அதனை செயல்படுத்த எப்போதும் சுதந்திரம் இருந்தே வந்தது. எங்களிடையே தொடர்பு மிகவும் மென்மையாக இருந்தது, பல்வேறு உத்திகள் குறித்து ஆரோக்கியமான உரையாடல்கள் நிகழ்த்தியுள்ளோம்.

கிரிக்கெட்டில் கேப்டனே பாஸ். களத்தில் கேப்டன் தான் முக்கியம். ஆனால் பயிற்சியாளரின் சிந்தனை, உத்திகளுக்கும் இடமுண்டு. கடந்த தொடர்களில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு விராட் கோலிக்குப் பங்கிருக்கிறது என்றால் அனில் கும்ப்ளேவுக்கும் பங்கு உள்ளது.

எனவே இந்த ‘கருத்து வேறுபாடு’ விரைவில் தீரும் என்றே நான் நம்புகிறேன். ஏனெனில் இருவருமே இந்திய அணியின் நன்மைகளை முன்னிறுத்துபவர்கள் எனவே விரைவில் இதற்கு முடிவு வரும்.

இவ்வாறு கூறியுள்ளார் ஆர்.பி.சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x