

பெங்களூரு: இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் பிரபலமான உலகின் டாப் 5 அணிகளில் ஒன்றாக அறியப்படுகிறது ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. மற்ற நான்கு இடங்களை கால்பந்தாட்ட கிளப் அணிகள்தான் பிடித்துள்ளன.
இந்திய அளவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் பிரபலமான அணியாக ஆர்சிபி உள்ளது. இந்த சமூக வலைதளத்தில் அதிக இன்ட்ரேக்ஷனை பெற்றுள்ள டாப் 5 அணிகளில் இடம் பிடித்துள்ள ஒரே இந்திய அணியும் ஆர்சிபிதான். உலக அளவில் இன்ஸ்டாவில் பிரபலமான கிரிக்கெட் அணியாகவும் அறியப்படுகிறது. சமூக ஊடக அனாலிட்டிக்ஸ் நிறுவனம் நடத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது.
ஆர்சிபி அணி இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 948 மில்லியன் இன்ட்ரேக்ஷனை கொண்டுள்ளது. இதற்கு மற்றொரு காரணம் அந்த அணிக்காக கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வரும் விராட் கோலி என்றும் சொல்லப்படுகிறது. ஐபிஎல் அரங்கில் ஒரே அணிக்காக விளையாடி வரும் இந்திய அணி வீரராக கோலி திகழ்கிறார். அந்த அணியின் ரசிகர் படைக்கு அவர்தான் தளபதி என தெரிகிறது.
இன்ஸ்டாகிராம் தளத்தில் கோலி சுமார் 234 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளார். அவரது இருப்புதான் ஆர்சிபி அணி இன்ஸ்டாவில் மிகவும் பிரபலமாக இருக்க காரணமாம். கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இதற்கு மற்றொரு காரணம் என சொல்லப்படுகிறது. மகளிர் ப்ரீமியர் லீக் தொடர் ஆர்சிபி அணியை இன்ஸ்டாவில் மேலும் பிரபலமடைய செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் அந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.