Published : 31 Jan 2023 05:10 PM
Last Updated : 31 Jan 2023 05:10 PM

தோனி - கோலி இடையிலான பெரிய வித்தியாசம்: கோலி ‘பாசிட்டிவ்’, தோனி அப்படி அல்ல!

கோலி மற்றும் தோனி | கோப்புப்படம்

2018-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ஒரு போட்டியில் போட்டியை வெல்ல முயற்சி செய்யாமல் செம அறுவையாக ஆடி சரணடைந்தபோது தோனிதான் கிரீசில் இருந்தார். அவர் அப்படி ஆடியதற்காக ரவி சாஸ்திரி தோனியைக் குறிவைத்து ‘நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருக்கலாம், என் பார்வையில் இன்னொரு முறை இப்படி ஆடினால், இந்தியாவுக்காக ஆடுவது கடைசியாக இருக்கும்’ என்று எச்சரித்ததை முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தன் புத்தகத்தில் கூறியதைப் பற்றிப் பார்த்தோம்.

ஆர்.ஸ்ரீதரின் “Coaching Beyond: My Days With The Indian Cricket Team” எனும் நூலில் இன்னொரு சுவாரஸ்யமான உரையாடலைக் குறிப்பிட்டுள்ளார். அந்த உரையாடல் 2014-15 தொடரில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பொறுப்பு கேப்டனாக இருந்தபோது நிகழ்ந்தது. தோனியின் ‘நெகட்டிவ்’ மைண்ட் செட்டிற்கு உதாரணமாக இந்தச் சம்பவத்தையும் நாம் குறிப்பிடலாம்.

2014-15 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் மைக்கேல் கிளார்க் முன்கூட்டியே டிக்ளேர் செய்து 364 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணியை இறக்கி சுருட்டி வெற்றி பெற ஒரு முயற்சி மேற்கொண்டார். விராட் கோலி ஏற்கெனவே தன் கேப்டன்சி அறிமுகப் போட்டியான இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் அற்புதமான சதம் ஒன்றை அடித்தார். 2-வது இன்னிங்சில் மைக்கேல் கிளார்க் ஒரு சவாலை முன்வைத்தார். அதாவது ‘முடிந்தால் நீ சேஸ் பண்ணு, நீ வென்றால் உனக்கு நான் வென்றால் எனக்கு’ என்பது போன்ற ஒரு சவாலாகும் அது. கேப்டன் விராட் கோலி சவாலை ஏற்றுக் கொண்டு இலக்கை விரட்டினார். தற்போது ஓய்வு பெற்று விட்ட முரளி விஜய் அற்புதமான ஒரு இன்னிங்சை ஆடினார், சதத்திற்கு அருகில் வந்து அவர் ஆட்டமிழந்தாலும் சேசிங்கிற்கு ஒரு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

இந்த இன்னிங்ஸ் குறித்த, கோலியின் விரட்டல் முடிவு குறித்த விஷயத்தை தன் நூலில் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார் ஆர்.ஸ்ரீதர்:

“அடுத்த நாளன்று இந்தியா வெற்றி இலக்கை எப்படி அணுகுவது என்பதில் விராட் கோலி தெள்ளத் தெளிவாக இருந்தார். ஆஸ்திரேலியா 4ம் நாளில் டிக்ளேர் செய்தால் கூட இந்தியா ஓரு ஓவருக்கு 4 ரன்களுக்கும் மேல் எடுத்தால்தான் வெற்றி இலக்கு நோக்கி முன்னேற முடியும். ஆஸ்திரேலியா கேப்டன் கிளார்க் அவ்வாறே டிக்ளேர் செய்து சவால் விடுத்தார்.

விராட் கோலி பிடிவாதமாக இலக்கை விரட்டுவோம், சும்மா ஆடி ட்ரா செய்ய ஆடப்போவதில்லை என்று முடிவு கட்டி விட்டார்” என்று எழுதியுள்ளார்.

ஆனால், இந்த இடத்தில் தான் ஒரு ட்விஸ்ட், பொதுவாக நாம் என்ன நினைப்போம் தோனி ஒரு பாசிட்டிவ் கேப்டன் டார்கெட் நோக்கி செல்லுங்கள் என்று ஊக்குவிப்பார் என்றுதானே! அதுதான் இல்லை. கோலிக்கும் தோனிக்கும் பேருந்தில் நடந்த உரையாடல் பற்றி ஸ்ரீதர் இப்படிப் பதிவிட்டுள்ளார்:

”பிற்பாடு விராட் கோலி என்னிடம் இதைக் கூறினார். எம்.எஸ்.தோனி கோலிக்கு அருகில் அமர்ந்திருந்தார். ’இதோ பாரு கோலி, இலக்கை நோக்கி வெற்றிக்காக ஆடலாம், நீ அந்த மாதிரி ஆட்டக்காரன் தான் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். ஆனால் ஒரு கேப்டனாக மற்ற வீரர்கள் பற்றியும் நீ யோசிக்க வேண்டும். மற்ற வீரர்கள் அந்த அளவுக்கு பாசிட்டிவாக ஆடுவார்களா? 360 ரன்களை துரத்தும் அளவுக்கு பாசிட்டிவாக ஆடுவார்களா. அதுவும் ஆட்டத்தின் கடைசி நாளில்?’ எனவே விராட், நீ முடிவெடுக்கும் போது அணியின் ஒட்டுமொத்த பலத்தையும் எடைபோட்டு முடிவெடுக்க வேண்டும்” என்று தோனி விராட் கோலிக்கு அட்வைஸ் செய்தார்.

விராட் கோலியும் தோனி கூறியதில் ஒரு ‘மெரிட்’ இருக்கிறது என்று ஒப்புக் கொண்டார். ஆனால் பாசிட்டிவிட்டிதான் முன்னேற ஒரே வழி என்பதில் கோலி தெள்ளத் தெளிவாக இருந்தார். அப்போது தோனியின் எச்சரிக்கைக்குப் பதில் அளித்த விராட் கோலி, ‘முயற்சி செஞ்சாத்தானே நமக்கு இது சாத்தியமா இல்லையா என்பது தெரியும், கடைசி நாளில் 360 ரன்களை இதுவரை விரட்டவில்லையே. எனவே விரட்டிப் பார்த்தால்தானே முடியுமா இல்லையா என்பது தெரியவரும்? முயற்சி செய்வோம், ஒரு ட்ரை கொடுப்போம்… முயன்று பார்க்காவிடில் நமக்கு நம் திறமைகள் எப்படி தெரியவரும்?’ என்று கோலி பதிலளித்தார்” என்று ஆர்.ஸ்ரீதர் பதிவிட்டுள்ளார்.

364 ரன்கள் இலக்கை எதிர்த்து அன்று விராட் கோலி அதே டெஸ்ட் போட்டியில் தன் 2வது சதத்தை பதிவு செய்தார். முரளி விஜய் துரதிர்ஷ்டவசமாக 99 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றாலும் விராட் கோலி கேப்டன்சியில் இந்தியாவின் அணுகுமுறை இனி இப்படித்தான் என்பதை உறுதி செய்வதாகவும் இருந்தது.

மேலும், ட்ரா செய்ய ஆடினால் தோற்றுத்தான் போவோம் என்பதில் கோலியும் ரவிசாஸ்திரியும் தெளிவாக இருந்தனர். வீரமாக இலக்கை விரட்டி தோற்றாலும் பரவாயில்லை. வீரர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்படும் என்பதோடும் மைக்கேல் கிளார்க் போன்ற மிகச்சிறந்த வலுவான கேப்டன்களுக்கும் ஒரு பாடம் கற்பித்தது போன்று இருக்கும் என்பதுதான் கோலியின் ஸ்டைல். இதற்கு தோனியின் அணுகுமுறை சரிப்பட்டு வராது என்பதை நாம் ஆர்.ஸ்ரீதரின் இந்தப் பதிவிலிருந்து ஊகித்து அறியலாம்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x