Published : 31 Jan 2023 02:33 PM
Last Updated : 31 Jan 2023 02:33 PM

தொடரைச் சமன் செய்ய ‘தரமற்ற பிட்ச்’ கேட்டதா இந்திய அணி நிர்வாகம்? - வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிட்ச் தயாரிப்பாளர்

லக்னோ கிரிக்கெட் மைதானம்

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான லக்னோ பிட்ச் சென்னை - சேப்பாக்கம் பிட்சை விட பல மடங்கு தரமற்றதாக இருந்தது என்பது இப்போது சர்ச்சையாகியுள்ளது. உண்மையில் இந்தப் பிட்சிற்கு முன்னதாக வேறு இரண்டு பிட்ச்களைத்தான் பிட்ச் தயாரிப்பாளர் தயாரித்திருந்தார். ஆனால், அணி நிர்வாகத்திடமிருந்து கடைசி நேர ‘கோரிக்கை’ எழுந்ததால் சிகப்பு மண்ணாகக் காட்சியளித்த ஆட்டம் நடைபெற்ற அந்த பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல் டி20 போட்டியில் தோல்வியுற்றதால் 2வது போட்டியில் எப்படியாவது வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற வெறியில் படுமோசமான குழிப்பிட்சைப் போட வைத்துள்ளது இந்திய அணி நிர்வாகம். பிட்சை மாற்றிக் கேட்டது என்னவோ இந்திய அணி நிர்வாகம். ஆனால், அந்த பிட்சைப் போட்ட கியூரேட்டர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எய்தவன் இருக்க அம்பை நோவதேன்? இதைவிடக் கொடுமை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனக்கு எதுவுமே தெரியாதது போல் ‘இந்தப் பிட்ச் ஒரு ஷாக்கர்’ என்று கூறினாரே பார்க்கலாம்.

அதாவது சில நாட்களுக்கு முன்னதாகவே இரண்டு கருப்பு மண் பிட்சைத் தயாரித்துள்ளார் பிட்சைத் தயாரித்தவர். ஆனால் அது வேண்டாம், வேறு பிட்ச் வேண்டும் என்று அவருக்கு இந்திய அணி நிர்வாகம் நெருக்கடி கொடுத்து புதிய பிட்சை தயாரித்துள்ளனர் என்று முன்னணி ஆங்கில நாளேடு ஒன்று கூறியுள்ளது. அந்த பிட்ச் சரியாக செட் ஆகவில்லை. அது குழிப்பிட்ச் ஆகவே இருந்தது. இது வழக்கமாக இந்திய அணி நிர்வாகம் செய்வதுதான்.

இங்கிலாந்துக்கு எதிராக சென்னை டெஸ்ட்டில் தோற்றதையடுத்து விராட் கோலி - ரவிசாஸ்திரி கூட்டணி அடுத்த 3 டெஸ்ட் பிட்ச்களையும் தாறுமாறான குழி பிட்சாகப் போட்டு வென்றதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம். அந்த வெற்றியையும் கொண்டாடி மகிழ்ந்தோமே!!

கேட்டால் ஸ்பின் பிட்சை கேவலமாகப் பேசுகிறார்கள், நமக்கு அவர்கள் கிரீன் டாப் பிட்ச் போடுவதில்லையா என்று அஸ்வின் போன்ற ஒரு மரியாதைக்குரிய சர்வதேச கிரிக்கெட் வீரரே விவரம் தெரியாதவர் போல் பேசுவதையும் பார்த்தோம். இவையெல்லாம் வங்கதேசம் போன்ற வாரியம் செய்யும் விஷயமாகும். உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் படுமட்டமான பிட்சைத் தயாரித்து வெற்றி பெறுவதில் பெருமை அடைவதை என்ன சொல்வது? இப்பவும் கூறுவோம் முறையான ஸ்பின் பிட்ச் வேறு. குழிப் பிட்ச் வேறு.

கவுதம் கம்பீரும் பிட்சைக் கடுமையாக விமர்சித்தார். ”பிட்சின் மையப்பகுதியில் புற்கள் இருந்தன. ஆனால், இரு முனைகளிலும் ஒன்றுமே இல்லை. அதாவது மண் தளர்வாக இருந்தது பந்துகள் திரும்பி எழும்பக் காரணமாயின. மிகவும் தரக்குறைவான பிட்ச்” என்று விமர்சித்தார்.

இப்போது பழைய பிட்ச் தயாரிப்பாளர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு புதிய பிட்ச் தயாரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 3-வது டி20 போட்டி நடைபெறும் அகமதாபாத் பிட்ச் எப்படி இருக்கப் போகிறதோ என்று நியூஸிலாந்து அணி கவலை கொண்டுள்ளது. பிசிசிஐ பிற அணிகள் நம் பிட்ச் பற்றி கூறும் விமர்சனங்களைப் பொருட்படுத்தி உண்மையில் நல்ல பிட்சை போட்டு உண்மையான கிரிக்கெட் ஆட்டத்திறமையை வெளிப்படுத்தி இந்திய அணி உண்மையாக வெற்றி பெறுமாறு செய்ய வேண்டும். இல்லையெனில் இப்போது உள்ள பேட்டர்களுக்கு ஸ்பின் ஆட வரவில்லை என்பதால் இந்திய அணி வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடையவே வாய்ப்புகள் அதிகம். இந்த எச்சரிக்கையை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஏற்கெனவே ஒலித்துள்ளார், நேதன் லயன் இருக்கிறார் ஜாக்கிரதை! குழிப் பிட்ச் போடாதீர்கள் என்பதே ஸ்ரீகாந்த் போன்றவர்களின் எச்சரிக்கையின் சாராம்சமாகும்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x