

சென்னை: இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் போட்டியில் தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது.
கட்டுமான பொறியாளர்களிடையே நடத்தப்பட்ட இந்தத்தொடரின் இறுதி ஆட்டத்தில் தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் – மதுரை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 12 ஓவர்களை கொண்ட இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அரவிந்தன் 30 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். 107 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மதுரை சூப்பர் கிங்ஸ் அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாக தஞ்சாவூர் அணியின் அரவிந்தன் தேர்வானார். இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற தஞ்சாவூர் அணிக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.