

லக்னோ: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ஒரு சிக்ஸர் கூட ஸ்கோர் செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீரும் ஆடுகளத்தை சாடியுள்ளனர்.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தது. அதை விரட்டிய இந்திய அணி 19.5 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களே அதிகம் பந்து வீசி இருந்தனர். அதில் நியூஸிலாந்து அணி மொத்தம் 17 ஓவர்களுக்கு ஸ்பின்னர்களை பயன்படுத்தி இருந்தது.
“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த விக்கெட் அதிர்ச்சியை கொடுத்தது. கடினமான விக்கெட் குறித்து நான் பொருட்படுத்திக் கொள்வதில்லை. அதே நேரத்தில் இது டி20 போட்டிக்கான விக்கெட் அல்ல. அதை நான் சொல்லியாக வேண்டும்” என ஹர்திக் பாண்டியா சொல்லி இருந்தார்.
“இந்த ஆடுகளத்தின் தரம் மிகவும் மோசம். இது டி20 போட்டிக்கான ஆடுகளமே அல்ல. இந்த ஆடுகளத்தை பார்த்தால் டிகாக் போன்ற வீரர்கள் இங்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடவே வரமாட்டார்கள்” என கம்பீர் சொல்லியுள்ளார்.
இந்தப் போட்டியை வர்ணனை செய்தபோது அவர் இதனை சொல்லி இருந்தார். லக்னோ அணியின் வழிகாட்டியாக அவர் செயல்பட்டு வருகிறார். டிகாக் லக்னோ அணியில்தான் விளையாடி வருகிறார். அந்த அணியின் மைதானமும் அதுதான்.