

சென்னை: அண்டர் 19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை திறம்பட வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்துள்ளார் கேப்டன் ஷபாலி வர்மா. தற்போது எதிர்வரும் பிப்ரவரி 10-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் தனது முழு கவனத்தையும் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள், மக்கள் என வாகை சூடிய இந்திய ஜூனியர் மகளிர் கிரிக்கெட் அணியின் ‘சிங்கப் பெண்களுக்கு’ தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கோப்பையை வென்ற இந்த அணிக்கு ரூ.5 கோடி பரிசு தொகையை வழங்குவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில் கடந்த 2020-ல் மெல்பர்னில் நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றவுடன், ஷபாலி கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் களத்தில் கலங்கி நின்றார். நேற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதும் அவர் கண்ணீர் சிந்தி இருந்தார்.
“2020-ல் சோகத்தினால் கண்ணீர் சிந்தினேன். ஆனால், இது ஆனந்தக் கண்ணீர். நாங்கள் இங்கு எதற்காக வந்தோமோ அதை அடைந்து விட்டோம். நான் என் கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சித்தேன். ஆனால், என்னால் அது முடியவில்லை” என ஷபாலி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இப்போது எனது கவனம் அனைத்தும் எதிர்வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில்தான் உள்ளது. சீனியர் அணியுடன் இணையும் போது இந்த வெற்றியை அதற்கான ஊக்கமாக எடுத்துக் கொள்வேன். நாங்கள் சீனியர் பிரிவிலும் கோப்பையை வெல்வோம் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.