முரளி விஜய் | கோப்புப்படம்
முரளி விஜய் | கோப்புப்படம்

“2002 முதல் 2018 வரை அற்புதமானவை” - சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த முரளி விஜய்

Published on

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார். ட்வீட் மூலம் தனது ஓய்வு அறிவிப்பை அவர் அறிவித்துள்ளார்.

38 வயதான முரளி விஜய் தமிழகத்தை சேர்ந்தவர். லிஸ்ட் ஏ மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். கடந்த 2008 முதல் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றார். இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3891 ரன்களை குவித்துள்ளார். இதில் 12 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும்.

17 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இது மட்டுமல்லாது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்காக விளையாடி உள்ளார். கடந்த 2018-க்கு பிறகு இவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் கிடைக்கப் பெறவில்லை. இந்த சூழலில் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

“அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். இதனை நன்றி உணர்வுடன் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 2002 முதல் 2018 வரையிலான இந்தப் பயணம் எனது வாழ்வின் அற்புதமான ஆண்டுகள் என சொல்வேன். ஏனெனில் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் செம்பிளாஸ்ட் சன்மார் அணி எனக்கு வழங்கிய வாய்ப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

சக வீரர்கள், பயிற்சியாளர்களுக்கும் என எனது கனவை நிஜமாக்க உதவிய அனைவருக்கும் இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்து, ஊக்கமும் கொடுத்து வந்த ரசிகர்களுக்கு எனது நன்றிகள்” என முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in