மக்காவு ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதியில் சாய்னா தோல்வி

மக்காவு ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதியில் சாய்னா தோல்வி
Updated on
1 min read

மக்காவு ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சாய்னா 17-21, 17-21 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 226-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜிஹங்யிமானிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவடைந்தது.

தரவரிசையில் 11-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேற்றம் கண்டிருந்த சாய்னா இந்த தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் 3 செட்கள் விளையாடியே வெற்றியை பெற்றிருந்தார். நேற்றைய ஆட்டத்தில் 19 வயதான ஜிஹங் கடும் நெருக்கடி கொடுத்தார்.

முதல் செட்டில் 4-2 என முன்னிலை வகித்த அவர் ஒரு கட்டத்தில் 9-8 என இருந்த போது தொடர்ச்சியாக 5 புள்ளிகளை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து முன்னிலை வகித்த அவர் முதல் செட்டை எளிதாக வசப்படுத்தினார்.

2-வது செட்டில் சாய்னா 6-0 என வலுவான முன்னிலை வகித்தபோதும் அதை சரியாக பயன்படுத்த தவறினார். திடீரென ஆக்ரோஷமாக விளையாடிய ஜிஹங் 7-7 என சமநிலையை உருவாக்கிய நிலையில் அடுத்த சில விநாடிகளில் 11-9 என முன்னிலை பெற்றார்.

ஒரு கட்டத்தில் 14-12 என சாய்னா போராடினார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜிஹங் 19-12 என முன்னேறி சென்றார். இந்த சமயத்தில் சாய்னா தொடர்ச்சியாக 4 புள்ளிகள் பெற்றார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஆட்டத்தை 21-17 என ஜிஹங் முடிவுக்கு கொண்டு வந்தார்.

தரவரிசையில் 10 இடத்தில் உள்ள சாய்னா தரவரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வீராங்கனையிடம் தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சாய் பிரணீத் 19-21, 9-21 என்ற நேர் செட்டில் சீனாவின் ஜூன் பெங்கிடம் தோல்வியடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in