Published : 28 Jan 2023 06:39 AM
Last Updated : 28 Jan 2023 06:39 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ், ஜோகோவிச்

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெர்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 12-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 18-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவுடன் மோதினார்.

3 மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-2), 6-4, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் தனது 4-வது முயற்சியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். 2019, 2021, 2022-ம் ஆண்டு தொடர்களில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அரைஇறுதியுடன் வெளியேறி இருந்தார்.கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 2-வது முதன்முறை. 2021-ம் ஆண்டு அவர், பிரெஞ்சு ஓபனில் இறுதி சுற்றில் விளையாடி இருந்தார். அப்போது அவர், சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் இழந்திருந்தார்.

சுவாரஸ்யமாக தற்போதைய ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியிலும் நோவக் ஜோகோவிச்சுடனே மோத உள்ளார் 24 வயதான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ். 9 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நோவக் ஜோகோவிச் அரை இறுதி சுற்றில் 7-5,6-1,6-2 என்ற நேர்செட்டில் 35-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பாலை தோற்கடித்தார்.

இந்த ஆட்டம் 2 மணி நேரம் 20 நிமிடங்களில் முடிவடைந்தது. நாளை (29-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நோவக்ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடுகிறார். இதில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்றால், டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x