

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தமிழ்நாடு அணி.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்களும், சவுராஷ்டிரா அணி 192 ரன்களும் எடுத்தன. 132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி ரவீந்திர ஜடேஜா, தர்மேந்திரசிங் ஜடேஜா ஆகியோரது சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்களை சாய்த்தார்.
266 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்தது. நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா அணி 68.2 ஓவர்களில் 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் தமிழ்நாடு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சவுராஷ்டிரா அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் 101 ரன்கள் விளாசினார். அர்பித் வசவதா 45, ரவீந்திர ஜடேஜா 25, ஷிராக் ஜானி 13 ரன்களில் வெளியேறினர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. தமிழக அணி சார்பில் அஜித் ராம் 6, மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.