Published : 17 Jul 2014 10:00 AM
Last Updated : 17 Jul 2014 10:00 AM

இந்தியா – இங்கிலாந்து 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் இந்த டெஸ்ட் போட்டி குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. முக்கியமாக தொடக்கவீரர் முரளி விஜய் முதல் இன்னிங்ஸில் 146 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 52 ரன்களும் எடுத்தார். தோனி, ஸ்டுவர்ட் பின்னி, புஜாரா ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் புவனேஷ்வர் குமார், முகமது சமி ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்தனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா சிறப்பாகவே செயல்பட்டனர்.

இங்கிலாந்து அணியிலும் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அந்த அணியின் ஜோ ரூட் 154 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 81 ரன்கள் எடுத்து சாதித்தார். முதல் டெஸ்ட் போட்டி முழுவதும் பேட்டிங்குக்கு சாதகமாகவே அமைந்தது. ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் வகையில் பந்து ஸ்விங் ஆகவில்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் சிரமம் ஏதுமின்றி விளையாடினர்.

பொதுவாக இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால் நாட்டிங்ஹாம் மைதானம் அவ்வாறு இல்லை. அதே நேரத்தில் லார்ட்ஸ் மைதானம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இங்கிலாந்து பந்து வீச்சை கூடுதல் கவனத்துடன் எதிர்கொண்டு விளையாடினால்தான் மட்டும் இந்திய பேட்ஸ்மேன்களால் களத்தில் நிலைத்து நின்று விளையாட முடியும்.

முதல் டெஸ்ட்டை போலவே லார்ட்ஸ் டெஸ்டிலும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கும் என்று தெரிகிறது.

மைதான வரலாறு

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து இடையே இதுவரை 16 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 11 முறை இங்கிலாந்து வென்றுள்ளது. ஒருமுறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. கடைசியாக 1986-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போது சேதன் சர்மா, திலிப் வெங்சர்க்கார், கபில் தேவ் ஆகியோர் அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தனர்.

அதன் பிறகு சுமார் 28 ஆண்டுகளில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை இந்தியாவால் வீழ்த்த முடியவில்லை. மேலும் சச்சின், ராகுல் திராவிட், விவிஎஸ் லட்சுமணன் போன்ற அனுபவ வீரர்கள் யாரும் இல்லாமல் இந்தியா இப்போது முதல்முறையாக லார்ட்ஸில் களமிறங்குகிறது.

மிரட்டும் இங்கிலாந்து வீரர்கள்

இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், பெல், ஜோ ரூட், ஆண்டர்சன், ஸ்டூவர் பிராட் ஆகியோர் லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக விளையாடி வந்துள்ளனர்.

குறிப்பாக கேப்டன் குக் இந்த மைதானத்தில் 17 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 1,206 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதம், 7 அரைசதம் அடங்கும். சராசரி 41.58 இங்கிலாந்தின் மற்றொரு மூத்த பேட்ஸ்மேன் இயான் பெல், லார்ட்ஸில் 15 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 1,205 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள், 8 அரைசதங்கள் அடங்கும். சராசரி 57.38.

இளம் வீரரான ஜோ ரூட் இந்த மைதானத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 512 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக இலங்கைக்கு எதிராக 200 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். சராசரி 102.40. ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கு 15 டெஸ்ட் போட்டிகளில் 67 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் 12 டெஸ்ட் போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளதால், இந்த டெஸ்டில் வென்று உள்ளூரில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது இந்திய அணிதான் விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான வரலாற்றை படைத்தது. இந்த அவப்பெயரை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் தோனி தலைமையிலான அணிக்கு உள்ளது. எனவே இந்த டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக அமையும்.

கம்பீருக்கு வாய்ப்பு கிடைக்குமா…

இந்திய அணியில் ஷீகர் தவாண் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. எனவே அவருக்கு பதிலாக அனுபவ வீரர் கவுதம் கம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் களமிறக்கப்படாததும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. எனவே அவருக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அணி விவரம்

இந்தியா: தோனி (கேப்டன்), ஷீகர் தவாண், முரளி விஜய், புராஜா, கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, ஜடேஜா, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், அஸ்வின், பின்னி, முகமது சமி, வருண் ஆரோன்.

இங்கிலாந்து: அலெஸ்டர் குக் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேலன்ஸ், பெல், பிராட், ஜோர்டன், மேட் பிரையர், ரோப்சன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பிளன்கெட்-ஏஎப்பி, ராய்ட்டர்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x