

ராஞ்சி: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இதில் கிஷன் 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். ராகுல் திரிபாதி மற்றும் சுப்மன் கில்லும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி 3.1 ஓவரில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா இணை பொறுமையாக ஆடியது. அதிலும் ஹர்திக் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி அடித்ததோடு 20 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் வந்தவர்களில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே நிலைத்து ஆடினார். கடைசிநேரத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் போராடினாலும், போதிய ரன்கள் எடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் கடைசி பாலுக்கு முன்னதாக அவரும் 50 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சான்டர், பெர்குசன், பிரேஸ்வெல் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.
நியூஸிலாந்து இன்னிங்ஸ்: டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே விரைவாக ரன் சேர்க்கும் முனைப்புடன் விளையாடியது.
ஆலன், 23 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் சிக்ஸர் விளாச முயன்று அவர் அவுட் ஆனார். அதே ஓவரில் மார்க் சேப்மேன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் கிளென் பிலிப்ஸ் உடன் இணைந்து 60 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கான்வே. பிலிப்ஸ், 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கான்வே வெளியேறினார். தொடர்ந்து பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னரும் தங்களது விக்கெட்டை இழந்தனர். கடைசி 5 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 59 ரன்கள் எடுத்தது. இதில் கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார்.
நோபாலாக வீசப்பட்ட முதல் பந்தில் சிக்ஸர் உட்பட வரிசையாக 3 சிக்ஸர்களை அந்த ஓவரில் மிட்செல் விளாசினார். அதன் மூலம் 26 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அடுத்த நான்கு பந்துகளில் முறையே 4, 0, 2, 2 என ரன்கள் எடுத்தார். அதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.