

இந்தூர்: புள்ளிவிவரங்களை வெளியிடும்போது அது சரியான பார்வையில் தரப்படவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
இந்தூரில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி நாள் ஒரு போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்தார். 2020-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் அடிக்கும் சதமாக இதுஅமைந்தது. இதையடுத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு சதமடித்தார் ரோஹித் சர்மா என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இது ரோஹித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஊடகங்களில் நான் 2020-ம்ஆண்டுக்குப் பிறகு சதமடித்தேன்என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த புள்ளிவிவரம் உண்மைதான். ஆனால் அது சரியான தகவலைப் படம்பிடித்து காட்டவில்லையென்று நினைக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளில் நான் 12 ஒருநாள் போட்டிகளில் மட்டுமேவிளையாடியுள்ளேன். 3 ஆண்டுகளுக்குப் பிறகு சதமடித்தேன் என்று செய்திகள் வந்திருப்பதால் நான் 3 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடவில்லை என்ற அர்த்தம் வந்துவிடுகிறது.
2020-ல் கரோனா அலை ஏற்பட்டபோது யாரும் கிரிக்கெட் விளையாடவில்லை. எல்லோரும் வீட்டில்தான் உட்கார்ந்திருந்தோம். எப்போதாவதுதான் ஒரு நாள் போட்டிகளில் விளையாடினோம். மேலும் அந்த நேரத்தில் எனக்குகாயம் ஏற்பட்டிருந்தது. எனவே,அதிக அளவு ஒரு நாள் போட்டிகளில் நான் விளையாடவில்லை. 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தேன். அதுதான் உண்மை. செய்திகள் வெளியிடும்போது இந்த புள்ளிவிவரங்களையும் அப்போது ஊடகங்கள் சேர்த்து தந்திருக்க வேண்டும்.
எனவே புள்ளிவிவரங்களைத் தரும்போது சரியான பார்வையில் தரப்படவேண்டும் என்றுநான் கேட்டுக் கொள்கிறேன்.போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் நிறுவனங்களும் தகவல்களை சரியான திசையில் தரவேண்டும்.
கடந்த ஆண்டு அதிக அளவில்டி20 போட்டிகளில் விளையாடினோம். தற்போதைய நிலையில் சூர்யகுமார் யாதவ்தான் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். சர்வதேச டி20போட்டிகளில் கடந்த ஆண்டுஅவர் 2 சதங்களை விளாசினார். வேறு யாரும் அதைச் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.