Published : 24 Jan 2023 09:28 PM
Last Updated : 24 Jan 2023 09:28 PM
இந்தூர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாடின. இந்தூரில் இந்த தொடரின் கடைசிப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி 385 ரன்கள் குவித்தது.
386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து விரட்டியது. அந்த அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கிய ஆலன், ரன் ஏதும் எடுக்காமல் பாண்டியா வீசிய முதல் ஓவரில் வெளியேறினார். தொடர்ந்து நிக்கோல்ஸ் உடன் 106 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கான்வே. நிக்கோல்ஸ், 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் மிட்செல் உடன் 78 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். மிட்செல், 24 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். பிலிப்ஸ், 5 ரன்களில் வெளியேறினார்.
100 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து கான்வே தனது விக்கெட்டை இழந்தார். பிரேஸ்வெல், 26 ரன்களில் அவுட்டானார். பின்னர் அடுத்தடுத்து அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. கடைசி விக்கெட்டாக சான்ட்னர் 34 ரன்களில் வெளியேறினார். 41.2 ஓவர்களில் 295 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். சஹல், 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் மற்றும் கில் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 212 ரன்கள் சேர்த்தனர். ஒரே ஓவரில் இருவரும் சதம் பதிவு செய்து மாஸ் காட்டினர்.
ரோகித், 85 பந்துகளில் 101 ரன்கள் குவித்து வெளியேறினார். கில், 78 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் இஷான் கிஷன், கோலி, சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அந்த சமயத்தில் இந்திய அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை.
பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூர் இணைந்து 54 ரன்களுக்கு 7-வது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தாக்கூர், 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். பாண்டியா, 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது.
The new No.1 team in the @MRFWorldwide ICC Men's ODI Team Rankings
— ICC (@ICC) January 24, 2023
More https://t.co/sye7IF4Y6f pic.twitter.com/hZq89ZPO31
Sign up to receive our newsletter in your inbox every day!