ஐபிஎல் 2023 | ரிஷப் பந்த்துக்கு பதிலாக டெல்லியை வழிநடத்த வார்னர்தான் சரியான சாய்ஸ்: காரணம் என்ன?

டேவிட் வார்னர் மற்றும் ரிஷப் பந்த்
டேவிட் வார்னர் மற்றும் ரிஷப் பந்த்
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளது இந்திய அணியை மட்டுமல்லாது ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் பாதிப்பை கொடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டனான அவர் எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனில் இல்லாத நிலையில் டெல்லியை வழிநடத்த சரியான சாய்ஸாக டேவிட் வார்னர் இருப்பார் என சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.

கடந்த 2022, டிசம்பர் 30-ம் தேதி ரிஷப் பந்த், காரில் பயணித்த போது விபத்தில் சிக்கினார். அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து மீண்டு களம் திரும்ப எப்படியும் கொஞ்ச காலம் ஆகும் என தெரிகிறது.

ஐபிஎல் அரங்கில் டெல்லி அணியை 2021 மற்றும் 2022 என இரண்டு சீசன்கள் பந்த் கேப்டனாக வழிநடத்தி உள்ளார். அவர் மீது டெல்லி அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்து அந்த பொறுப்பை கொடுத்தது. அவரும் அதனை சிறப்பாகவே செய்து வந்தார்.

“இது மிகவும் இக்கட்டான காலம். பந்த் இல்லாதது துரதிர்ஷ்டவசம். அவர் விளையாட போதுமான உடற்திறனை பெறவில்லை என்றாலும் எங்களுடன், எனக்கு பக்கத்தில் ஐபிஎல் தொடர் நடக்கும் போது இருக்கலாம். இது அவரது உடல் ஒத்துழைத்தால் மட்டுமே. அவர் இருப்பதே எங்களுக்கு எனர்ஜிதான்” என டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஏன் டேவிட் வார்னர் சரியான சாய்ஸ்? - டெல்லி அணியை பொறுத்தவரையில் தரமான வீரர்கள் அடங்கிய டி20 அணி என்று சொல்லலாம். இருந்தாலும் கேப்டன் பொறுப்புக்கு பந்த் இல்லாத நிலையில் அதற்கு டேவிட் வார்னர் மட்டுமே சரியானவராக இருப்பார். அனுபவம் மற்றும் வெற்றிக்கான வியூகத்தை அமைக்கும் வல்லமை கொண்டவர் அவர்.

இதற்கு முன்னர் ஐபிஎல் களத்தில் கேப்டனாக அணியை திறம்பட வழிநடத்திய அனுபவமும் கொண்டுள்ளார். அணியின் தலைவனாக சிறப்பான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். 2016-ல் அவர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது அவர்தான் டெல்லி அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in