Published : 16 Dec 2016 09:16 AM
Last Updated : 16 Dec 2016 09:16 AM

சென்னை சேப்பாக்கத்தில் இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்தை கபளீகரம் செய்ய இந்தியா தயார்

சாதனை முனைப்பில் விராட் கோலி, அஸ்வின் ; நெருக்கடியுடன் களமிறங்குகிறார் குக்



இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கு கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொட ரில் இந்திய அணி 3-0 என முன் னிலை வகிக்கிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்திருந்தது.

விசாகப்பட்டினம் டெஸ்ட்டில் 246 ரன்கள் வித்தியாசத்திலும், மொகாலி டெஸ்ட்டில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. மும்பை டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 கைப்பற்றியது.

இந்த தொடரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் சேப்பாக்கம் போட்டியை எதிர்கொள்கிறது. வார்தா புயலால் ஆடுகளத்தும், அவுட் பீல்டுக்கும் எந்தவித பாதிப் பும் ஏற்படாததால் போட்டிக்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் செய்துள் ளது.

மழை காரணமாக ஈரமாக காணப் பட்ட ஆடுகளத்தின் மைய பகுதியும் நிலக்கரியின் தணல் கொண்டு உலர வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரு நாட்களாக வெயிலும் கைகொடுத்ததால் ஆடுகளம் போட் டிக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் தயார் நிலையில் உள்ளது.

இந்திய அணி கடைசியாக 1985-1987-ம் ஆண்டு காலக்கட்டங்களில் 17 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காமல் இருந்தது. இந்த சாதனையை மும்பை டெஸ்ட்டில் கோலி தலைமையிலான இந்திய அணி சமன் செய்திருந்தது.

சேப்பாக்கம் டெஸ்ட்டில் வெற்றி பெறும் பட்சத்திலோ அல்லது போட்டியை டிரா செய்தாலோ இந்திய அணி புதிய சாதனையை நிகழ்த்தக்கூடும். இந்த வகையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1980-களில் தொடர்ச்சியாக 27 போட்டிகளில் தோல்வியை சந்தித்த தில்லை என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேப்பாக்கம் போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை 4-0 என கைப்பற்றும். இது நிகழ்ந்தால் இங்கிலாந்து அணிக்கு எதிரான மிகப்பெரிய டெஸ்ட் தொடர் வெற்றியாக இருக்கும். மேலும் 2011-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 4-0 என அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமையும்.

கடைசியாக 1992-93ம் டெஸ்ட் டில் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போதைய இந்திய அணி முறியடிக்கக்கூடும்.

உச்சக்கட்ட பார்மில் உள்ள கோலியிடம் இருந்து மீண்டும் ஒரு அற்புதமான இன்னிங்ஸ் வெளிப் படக்கூடும். இந்த ஆண்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள அவர், சென்னை ரசிர்களுக்கு தனது நேர்த்தியான பேட்டிங்கால் விருந்து படைப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.

28 வயதான கோலி, தற்போதைய தொடரில் 640 ரன்கள் குவித்துள்ளார். இந்திய வீரர்களில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் கவாஸ்ர்தான். அவர் 1971-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 774 ரன்கள் சேர்த்தார். இந்த சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 135 ரன்களே தேவை.

சேப்பாக்கம் மைதானம் ஆரம்ப நாட்களில் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால் கோலி எளிதாக இந்த சாதனையை முறியடிப்பார் என தெரிகிறது.

இந்த தொடரில் இந்திய அணி யின் ஆதிக்கத்துக்கு பின்கள பேட்டிங்கும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆல்ரவுண்டராக அஸ்வின் தனது சிறந்த பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த தொடரில் 27 விக்கெட்கள் வீழ்த்தியதுடன் 239 ரன்களும் சேர்த்துள்ளார்.

இந்த தொடரின் சிறந்த கண்டு பிடிப்பாக கருதப்படும் ஜெயந்த் யாதவ் 9-வது வீரராக களமிறங்கி சதம் அடித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 16 விக்கெட்கள் கைப் பற்றியதுடன் மொகாலி டெஸ்ட்டில் இக்கட்டான கட்டத்தில் 90 ரன்கள் குவித்து பலம் சேர்த்தார். இந்த மூவர் சுழல் கூட்டணி ஒட்டுமொத்த மாக இந்த தொடரில் 52 விக்கெட் களை வேட்டையாடி உள்ளது. சேப்பாக்கத்திலும் இந்த மூவர் கூட் டணி 'சுழன்று' விளையாடக்கூடும்.

சேப்பாக்கம் மைதானம் அஸ்வின், முரளி விஜய்யின் சொந்த மைதானம். இதனால் இவர்கள் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. விமர்சனத்துக்கு இடையில் மும்பை டெஸ்ட்டில் முரளி விஜய் சதம் அடித்துள்ளதால் அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறும் மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுலுக்கும் இந்த போட்டி ரன் குவிக்க சிறந்த வாய்ப்பாக இருக்கும். கடந்த ஆட்டத்தில் 47 ரன்களில் வெளியேறிய புஜாராவும் தனது இடத்தை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும்.

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமை முன்னாள் வீரர் சந்திரசேகரிடம் உள்ளது. அவர் 1972-ல் இங்கிலாந்துக்கு எதிராக 35 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்கள் தேவை. சுழலுக்கு சாதகமான சேப்பாக்கத்தில் அஸ்வின் அசத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரை இழந்துள்ள இங்கி லாந்து அணி ஆறுதல் வெற்றி பெற போராடும் என தெரிகிறது. கேப்டன் அலாஸ்டர் குக் நெருக்கடி யுடன் களமிறங்குகிறார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவும் பட்சத்தில் அவரது கேப்டன் பதவி ஆட்டம் காணக்கூடும்.

இதற்கிடையே வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக இந்த போட்டி யிலிருந்து விலகியுள்ளார்.

நேரம்: காலை 9.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

இங்கிலாந்தின் 652/7

சேப்பாக்கம் மைதானம் இங்கிலாந்து அணிக்கும் ராசியானதுதான். 1985-ல் இங்கு நடைபெற்ற போட்டியில் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 652 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இன்று வரையும் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ரன்குவிப்பாக இதுதான் உள்ளது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x