

சென்னை: சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள ரஞ்சிக் கோப்பை தொடரின் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக சவுராஷ்டிரா அணிக்காக களம் இறங்க உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா. அதனால் இப்போது அவர் சென்னை வந்துள்ளார். அதை குறிப்பிடும் வகையில் ‘வணக்கம் சென்னை’ என அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா நீண்ட நாட்களுக்கு பிறகு களத்தில் கம்பேக் கொடுக்க உள்ளார். காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடர் உட்பட சில முக்கிய தொடர்களை அவர் மிஸ் செய்தார்.
தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இருந்தாலும் அவர் தனது பிட்னஸை நிரூபிக்க வேண்டியுள்ளது. அதன் காரணமாக 2018-க்கு பிறகு அவர் ரஞ்சியில் முதல் முறையாக களம் காண்கிறார். இந்தப் போட்டியில் சவுராஷ்டிரா அணியை அவர் தலைமை தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் விளையாடும் வகையில் அவர் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் கசப்பான உறவு அணி நிர்வாகத்தோடு இருந்தாலும் அவை அனைத்தும் இரு தரப்புக்குள்ளும் சுமுகமாக பேசி தீர்க்கப்பட்டுள்ளது.