Last Updated : 23 Jan, 2023 07:52 AM

 

Published : 23 Jan 2023 07:52 AM
Last Updated : 23 Jan 2023 07:52 AM

ஆஸ்திரேலிய ஓபனில் கவனம் ஈர்த்த தமிழகத்தின் ஜீவன், பாலாஜி ஜோடி

ஜீவன் - பாலாஜி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் இவான் டுடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜிசெக் ஜோடியை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்தத் தொடரில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதேபோன்று இரட்டையர், கலப்பு இரட்டையர்கள் பிரிவிலும் முன்னணி ஜோடிகள் பங்கேற்றுள்ளன.

மதிப்புமிக்க இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் – ஸ்ரீராம் பாலாஜி மாற்று ஜோடிகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் மாற்று பட்டியலில் 9-வது இடத்தில் தங்களது வாய்ப்புக்காக காத்திருந்தனர். இவர்களுக்கு மேல் இருந்த சில ஜோடிகளுக்கு வைல்டு கார்டு வாய்ப்பு கிடைத்தது. சில ஜோடிகள் விலகினர். இதனால் பிரதான சுற்றுக்கான வாய்ப்பை பெறுவதில் ஓர் இடம் மட்டுமே முன்னேற வேண்டும் என்ற நிலையே ஜீவன் - பாலாஜி ஜோடிக்கு இருந்தது.

இதற்கிடையே பிரதான சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த குரோஷியாவின் இவான்டுடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜிசெக் ஜோடியுடன் வைல்டுகார்டு ஜோடியான அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்ட், பிரேசிலின் மார்செலோ மேலோ மோதும் வகையில் அட்டவணை வெளியாகி இருந்தது. மெக்கன்சி மெக்டொனால்ட் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலை 2-வது சுற்றில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோற்கடித்து இருந்தார். ஆனால் 3-வது சுற்றில் ஜப்பானின் நிஷியோகாவிடம் தோல்வி அடைந்த மெக்கன்சி மெக்டொனால்ட் காயம் அடைந்தார். இதனால் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் விலகுவதாக அறிவித்தார். அவர், விலகியதால் ஜீவன் - பாலாஜி ஜோடிக்கு ஆஸ்திரேலிய ஓபனில் களமிறங்கும் வாய்ப்பு கைகூடியது.

கிடைத்த வாய்ப்பை முதல் சுற்றில்சென்னையை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியனும், கோவையைச் சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜியும் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த ஜோடி தங்களது முதல் சுற்றில் போட்டித் தரவசையில் 5-வது இடமும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் 2-வது இடம் பிடித்த ஜோடியும் ஆன குரோஷியாவின் இவான் டுடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜிசெக்கை எதிர்கொண்டனர்.

முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் வென்ற ஜீவன் - பாலாஜி ஜோடி 2-வது செட்டை 2-6 என பறிகொடுத்தது. ஆனால் கடைசி செட்டில் 6-4 என பதிலடி கொடுத்து வெற்றியை வசப்படுத்தி இவான் டுடிக், ஆஸ்டின் கிரஜிசெக் ஜோடியை தொடரில் இருந்து வெளியேற்றியது. இந்தியாவின் முன்ணனி இரட்டையர் பிரிவு ஜோடிகளான யுகி பாப்ம்ரி, சாகேத் மைனேனி மற்றும் ரோகன்போபண்ணா, ராம்குமார் ராமநாதன் ஆகியோர் தங்களது முதல் சுற்று ஆட்டங்களிலேயே தோல்வியை அடைந்த நிலையில் ஜீவன் - பாலாஜி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.எனினும் ஜீவன் - பாலாஜி ஜோடியால் 2-வது சுற்றை வெற்றிகரமாக கடக்க முடியாமல் போனது. இந்த ஜோடி 4-6, 4-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜெர்மி சார்டி, ஃபேப்ரீஸ் மார்ட்டின் ஜோடியிடம் தோல்வி கண்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்தான் புனேவில் நடைபெற்ற டாடா ஓபன் தொடரில் ஜீவன் - பாலாஜி ஜோடி இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தது. 34 வயதான ஜீவன் நெடுஞ்செழியன்,

மறைந்த தமிழக முன்னாள் இடைக்கால முதல்வர் இரா. நெடுஞ்செழியனின் பேரன் ஆவார். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் ஜீவன் நெடுஞ்செழியன் பங்கேற்ற நிலையில் முதல் சுற்றுடன் வெளியேறி இருந்தார். அதன் பின்னர் 6 வருடங்களுக்கு பிறகு தற்போது கிராண்ட்ஸ்லாம் தொடரில் விளையாடிய நிலையில் முதல் ஆட்டத்தில் மட்டும் வெற்றியை ருசித்து வெளியேறி உள்ளார்.

ஜீவனும், பாலாஜியும் முதன்முறையாக 2007-ல் இணைந்து விளையாடினர். இதன் பின்னர் பாலாஜி பெரும்பாலும் விஷ்ணுவர்தனுடன் ஜோடி சேர்ந்து விளையாடத் தொடங்கினார். விஷ்ணுவர்தன் லண்டன் ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாடிவர் ஆவார். 2015 முதல் 2019 வரை விஷ்ணுவர்தனுடன் இணைந்து விளையாடினார் பாலாஜி. 2018-ம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் விஷ்ணுவர்தன், பாலாஜி ஜோடி 2-வது சுற்று வரை சென்றிருந்தது.

இதன் பின்னர் புதிய பார்ட்னரை பாலாஜி தேடிவந்த நிலையில் ஜீவனுடன் மீண்டும் இணைந்தார். 2022-ம்ஆண்டு மே முதல் இந்த ஜோடி சாலஞ்சர் டூர் போட்டிகளில் 19 தொடர்களில் விளையாடியது. இதில் சுலோவேக்கியா, பிரான்ஸில் நடைபெற்ற தொடர்களில் ஜீவன் - பாலாஜி ஜோடி கோப்பையை வென்றது. புனேவில் நடைபெற்ற ஏடிபி தொடரில் 2-வது இடம் பிடித்து இரட்டையர் பிரிவு தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்தனர். ஜீவன் - பாலாஜியின் அடுத்த இலக்கு பிரெஞ்சு ஓபனில் விளையாடுவதுதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x