Last Updated : 15 Dec, 2016 04:17 PM

 

Published : 15 Dec 2016 04:17 PM
Last Updated : 15 Dec 2016 04:17 PM

வெற்றிகளினால் மிகை நம்பிக்கை ஏற்பட்டு விடவில்லை; இன்னும் நிறைய விளையாட வேண்டும்: விராட் கோலி

தனது தலைமையின் கீழ் 5 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்றதையடுத்து மிகைநம்பிக்கையெல்லாம் ஏற்பட்டுவிடவில்லை, இன்னும் உலகம் முழுதும் நிறைய தொடர்களில் விளையாட வேண்டியுள்ளது என்றார் கேப்டன் விராட் கோலி தன்னடக்கத்துடன்.

மேலும் இதே போன்று எங்கும் வென்றால்தான் 7-8 ஆண்டுகளில் இந்திய அணி பற்றிய ஒரு மறக்க முடியாத அடையாளத்தை உலக அளவில் ஏற்படுத்த முடியும் என்கிறார் விராட் கோலி.

நாளை சென்னை டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி வீழ்த்த முடியாத ஒரு அணி என்ற நிலைக்குச் செல்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த விராட் கோலி, “அப்படியல்ல, இன்னும் உலகம் முழுதும் நிறைய மைதானங்களில் ஆட வேண்டியுள்ளது என்பதை தெரிந்தே வைத்துள்ளோம். இந்த ஒரு காலக்கட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல இந்த விஷயம்.

ஆனால் இப்போதைக்கு அணி நல்ல நிலையில் உள்ளது, மாறிவரும் அணி என்ற நிலையிலிருந்து இப்போது வெற்றிபெற தொடங்கியுள்ளோம். ஆனால் இதனை நான் மிகைநம்பிக்கையாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.

நான் ஏற்கெனவே கூறியது போல் இது ஒரு தொடர்ச்சியான நடைமுறை, இதே வெற்றிப்பாதையை அடுத்த 5-7 அல்லது 8 ஆண்டுகளுக்குத் தக்க வைக்க வேண்டும், அப்போதுதான் முதல் தர அணியாகி உலக கிரிக்கெட்டில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முடியும். அதாவது களத்தில் இறங்கிய சிறந்த அணி என்று அறியப்படுமாறு செய்யலாம்.

நாங்கள் இதனை அனைத்து வடிவங்களிலும் செய்ய விரும்புகிறோம், இதன் மூலம் உலக அரங்கில் இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு சிறந்த அடையாளத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். ஆனால் இதற்கு நிறைய திறமைகளும் தீவிர மனோபாவங்களும் தேவை, உடல்தகுதி மீது பெரிய அளவிலான கடின உழைப்பு உள்ளிட்டவை ஒரு அணியாக அந்த நிலையை அடைய முக்கியக் காரணிகளாக அமையும்.

நேர்மையாகக் கூற வேண்டுமெனில் வீழ்த்த முடியாத அணி என்றெல்லாம் நாங்கள் நினைக்கவில்லை. ஒவ்வொரு எதிரணியினரையும் நாங்கள் மதிக்கிறோம். ஒவ்வொரு முறையும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். எதிரணிகள் எங்களை நெருக்கடிக்குள் தள்ளும் என்பதை அறிந்தே செயல்படுகிறோம். நாங்கள் அதனை பாராட்டுகிறோம், ஏற்கிறோம் இதிலிருந்து வெளியேற பாதைகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம்.

இதுதான் எங்களுக்கு முக்கியமானது என்று கருதுகிறேன், எனவே நான் கூறியது போல் இது ஒரு தொடர்ச்சியான நடைமுறை 7-8 ஆண்டுகளுக்கு வெற்றிப்பயணம் தொடர வேண்டும்

சென்னை டெஸ்ட் போட்டி குறித்து...

நாங்கள் 4-0 என்று முன் கூட்டியே முடிவெடுக்கவில்லை. எங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு போட்டியும் மற்ற போட்டிகளிலிருந்து வேறுபட்டதே. ஆனால் டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் மாற்றமில்லை.

நாங்கள் தொடர்ந்து எப்படி ஆடிவருகிறோமோ அப்படியே ஆட விரும்புகிறோம், ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது என்பது நிறைய கடின உழைப்புகளை கோருவது, எனவே அதனை 3-0, 4-0 என்றெல்லாம் எண்வயப்படுத்துவது வீரர்களுக்கும் தொடருக்கும் நியாயம் செய்வதாகாது.

அஸ்வின், ஜெயந்த் யாதவ், ஜடேஜா ஆகியோரின் பேட்டிங் பங்களிப்புகள் தனித்துவமானவை.

அஸ்வின் தனது பேட்டிங் மூலம் மற்ற ஸ்பின்னர்களுக்கும் உத்வேகம் அளித்துள்ளார். ஜடேஜா பேட்டிங்கில் இந்தத் தொடரில் முதிர்ச்சி பெற்றுள்ளார். 90 ரன்களை தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கி அவர் அடித்துக் கொடுத்துள்ளார். ஜெயந்த் யாதவ்வும் ஒவ்வொரு முறையும் கற்று கொள்வதில் ஆர்வம் காட்டும் வீரர்.

ஷமி, புவனேஷ், உமேஷ் ஆகியோரும் பேட்டிங் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.

எனவேதான் 5 பேட்ஸ்மென்களுடன் ஆட ஒரு கேப்டனாக எனக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. ஜெயந்த் யாதவ் எனக்கு இங்கிலாந்தின் கிரேம் ஸ்வானை நினைவூட்டுகிறார்.

அவர் பந்து வீச்சில் பேட்ஸ்மென்கள் யோசித்து முடிவெடுக்க அவகாசம் அளிப்பதில்லை, சரியான லெந்தில் வீசுகிறார், இது அவரை ஸ்வானுடன் ஒப்பிட வைக்கிறது.

பந்தை அதிகம் காற்றில் தூக்கி வீசாமல் வேகத்தைக் கட்டுபடுத்தி வீசுவதில் ஸ்வான் சிறந்தவர், இதைத்தான் நான் ஜெயந்த் யாதவ்விடம் காண்கிறேன்.

எனவே ஒரு கேப்டனாக நான் அறிந்தவரையில் 3-வது ஸ்பின்னரை எதிரணியினர் அடித்து ஆட முயல்வார்கள். ஆனால் ஜெயந்த் யாதவ்வை அடிக்க முடியவில்லை, அவரை எப்போது விக்கெட் வேண்டுமானாலும் கொண்டு வர முடிகிறது.

தனது 235 ரன் இன்னிங்ஸ் குறித்து...

அது தன்னுணர்வுடன் கூடிய முயற்சியாகும் (அதாவது சிக்ஸ் அடிக்க வேண்டும் என்ற ஆசையைக் கட்டுபடுத்தி கொண்டு ஆடியது), ஒவ்வொரு முறை ஸ்பின்னர் வரும்போது அடித்து ஆட வேண்டும் என்று தோன்றும் ஆனால் கூடுதல் நேரம் பேட் செய்ய வேண்டும் என்ற தேவையினால் நான் உந்துதலை கட்டுப்படுத்தி ஆடிவருகிறேன். சிக்சர்கள் அடிப்பதற்கான தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. எந்த ஒரு பேட்ஸ்மெனும் 150, 160 ரன்களை கடக்கும் போது ஒரு சிக்ஸ் அடித்து அதனை கொண்டாடுவது என்பது தனனை வெளிப்படுத்திக் கொள்ளும் உணர்வு மட்டுமே.

பவுண்டரி அடிக்காமல் ஓவருக்கு 3 அல்லது 4 ரன்களை எடுக்க முடிந்தால் அதுவே அணிக்கு பயனளிக்கும். எனவே பெரிய ரிஸ்க் எடுத்து அணியின் உத்வேகத்தை கெடுக்க விரும்பவில்லை.

ஜோ ரூட் ஒரு தனித்துவமான வீரர். அவர் மிகவும் பாசிட்டிவ்வாக ஆடுகிறார், ஒவ்வொரு சூழ்நிலையையும் தனக்கான வாய்ப்பாக அவர் பார்க்கிறார், இந்தத் தன்மை அவரிடம் எனக்கு பிடித்திருக்கிறது. இவரது இந்த அணுகுமுறை அவருக்கு கேப்டன்சி கொடுத்தால் என்ன ஆகும் என்பது எனக்கு தெரியவில்லை” இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x