Published : 21 Jan 2023 06:37 PM
Last Updated : 21 Jan 2023 06:37 PM

ரோஹித்தின் அரைசதம் - நியூசி அணியை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூரில் உள்ள ஷகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஃபின் ஆலன் - தேவன் கான்வே இணை நியூசிலாந்துக்கு தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரை வீசிய முகமது ஷமி, ஃபின் ஆலெனை வீழ்த்தினார். ஒரு ரன்கூட எடுக்காமல் இருந்த நிலையில், நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தது. அடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ் 2 ரன்களிலும், தேவன் கான்வே 7 ரன்களிலும் வெளியேறிதால் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து திணறியது. 18 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 19வது ஓவரின் மூன்றாவது பந்தில் மைக்கேல் பிரேஸ்வெல்லும் முகமது ஷமியின் பந்துவீச்சில் அவுட்டானார். க்ளென் பிலிப்ஸ், (36), மைக்கல் ப்ரேஸ்வெல்(22), மிட்செல் சாட்னர் (27) ஆகிய மூவரைத் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறிதால் 34.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 108 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இந்திய அணி தரப்பில் முஹம்மத் சமி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் முஹம்மத் சிராஜ், சர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் மூவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா - சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்களைச் சேர்த்தது. 15 ஓவர் வீசிய ஹென்றி ஷிப்லி, எல்பிடபள்யூ முறையில் ரோஹித் ஷர்மாவை (51) அவுட்டாக்கி வெளியேற்றினார். தொடர்ந்து களத்திற்கு வந்த விராட் கோலி, சுப்மன் கில்லுடன் கைகோத்தார். ஆனால் சாட்னர் வீசிய 18வது ஓவரில் ஸ்டெம்பாகி கோலி 11 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து சுப்மன் கில் - இஷான் கிஷன் இணை வெற்றி இலக்கை எட்ட, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில், ஹென்றி ஷிப்லி மற்றும் மிட்சல் சாட்னர் இருவரும் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x