Published : 21 Jan 2023 12:54 PM
Last Updated : 21 Jan 2023 12:54 PM

ஐபிஎல் தொடரின் போது ரிஷப் பண்ட் என் பக்கத்தில் இருக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங்

டெல்லி கார் விபத்தில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்த இந்திய அதிரடி பேட்டர்/விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிகிச்சையில் இருப்பதால் வரும் ஐபிஎல் 2023 தொடரில் ஆட முடியாது. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனான ரிஷப் பண்ட் தன் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று அந்த அணியின் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐசிசி ரிவியூவுக்கு பாண்டிங் அளித்த பேட்டியில், “ஓய்வறையில் மற்ற வீரர்களுடனும் என் பக்கத்திலும் ரிஷப் பண்ட் அமர்ந்திருக்க வேண்டும், ஒவ்வொரு நாளும்.. இதுதான் என் விருப்பம், உடல் ரீதியாக அவர் ஆட முடியாவிட்டாலும் அவரது இருப்பு நிச்சயம் உத்வேகமாகவும் உறுதுணையாகவும் இருக்கும்.

இந்த அணியின் ஒரு பண்பாட்டு தலைவர் என்றால் அது ரிஷப் பண்ட்தான். அவரது அணுகுமுறை, அதுவும் அனைவரையும் ஈர்க்கும், பலரையும் தொற்றிக்கொள்ளும் அவரது புன்சிரிப்பை இழக்க முடியுமா..அவரிடம் நாங்கள் நேசிக்கும் அனைத்தையும் அவர் பெற்றிருக்கிறார். மார்ச் மத்தியில் அணியின் பயிற்சி, முகாம் தொடங்கும் போது, ரிஷப் பண்ட் இருக்க முடிந்தால், அவரை முழு நேரமும் என்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று ரிஷப் பண்ட்டி இல்லாமல் போனதை தன் பாணியில் கூறியுள்ளார் பாண்டிங்.

கார் விபத்தில் சிக்கி முழங்காலில் மட்டும் 3 அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன, இதில் 2 முடிந்து விட்டது, இன்னும் ஒன்று மீதமுள்ளது. ரிஷப் பண்ட் இடத்தை இட்டு நிரப்புவது கடினம் என்று கூறும் பாண்டிங், அவருக்கு சமமான ஒருவரை தேடுவது எத்தனை கடினமானது என்கிறார்.

“ரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரருக்கு மாற்று வீரரை கண்டுப்பிடிப்பது எளிதல்ல, இவரைப் போன்ற வீரர்கள் மரத்தில் காய்ப்பதில்லை. ஆனால் எப்படியும் மாற்று வீரரைக் கண்டுப்பிடித்து ஆகவேண்டும் தான்” என்கிறார் பாண்டிங்.

பண்ட் இடத்தை இட்டு நிரப்பப் போவது யார்?

ஐபிஎல் 2023-க்கான டிசம்பர் ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் எடுத்த 5 வீரர்களில் விக்கெட் கீப்பர்கள் யாரும் இல்லை. இங்கிலாந்தின் பில் சால்ட் தான் இவரது இடத்தை நிரப்ப முடியும். சர்பராஸ் கான் மும்பை அணிக்கு சையது முஷ்டாக் அலி டிராபியில் பகுதிநேர விக்கெட் கீப்பராக இருந்திருக்கிறார்.

ஐபிஎல் 2023 தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரல், மே முழுதும் நடைபெறும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x