

கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களின் பட்டியலில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுகலின் ரொனால்டோவும் நிச்சயம் இருப்பார்கள். இந்தச் சூழலில் இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு நேற்று அமைந்தது. பிஎஸ்ஜி மற்றும் சவுதி ஆல் ஸ்டார் லெவன் அணிக்காக இருவரும் விளையாடிய போது இது சாத்தியமானது.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி விளையாடிய பிஎஸ்ஜி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. மெஸ்ஸி ஒரு கோல் பதிவு செய்தார். மறுபக்கம் ரொனால்டோ தன் அணிக்காக 2 கோல்களை பதிவு செய்தார். இவர்கள் இருவரில் யார் சிறந்தவர் என்ற ஒப்பீடுகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இருந்துகொண்டே இருக்கும். உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு இதில் மெஸ்ஸியின் கை கொஞ்சம் ஓங்கி உள்ளது. இந்தச் சூழலில் இப்போது அது வேறு கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி, ரொனால்டோவை ஒரு தொனியில் பார்த்திருப்பார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் அந்த வீடியோ குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
“ரொனால்டோவை மெஸ்ஸி பார்ப்பது போல நம்மை நேசத்துடன் பார்க்கும் ஒருவரை நேசிக்க வேண்டும்” என பயனர் ஒருவர் அந்த வீடியோவை பகிர்ந்து கேப்ஷன் கொடுத்துள்ளார்.
“அடுத்தவருக்கு மரியாதை கொடுக்கும் அந்த பண்புதான் மெஸ்ஸிக்கு அழகு. சக போட்டியாளரையும் அவர் அப்படிதான் பார்ப்பார். இது கால்பந்து விளையாட்டு சார்ந்த அவரது அனுபவத்தின் வெப்பாடு என்றும் சொல்லலாம்” என பயனர் ஒருவர் கருத்து சொல்லியுள்ளார்.
“மெஸ்ஸி இந்த ஆட்டத்தை மிகவும் லேசாக எடுத்துக் கொண்டார். ஆனால், ரொனால்டாவோ ஏதோ உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதை போல இந்த ஆட்டத்தை அணுகினார்” என ஒருவர் தெரிவித்துள்ளார்.
“ஒருவேளை மெஸ்ஸி உலகக் கோப்பை வென்றதை எண்ணிக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். அதனால்தான் அவர் அப்படி பார்த்திருந்தார்” என ஒருவர் சொல்லியுள்ளார். இன்னும் சிலரோ மெஸ்ஸி, ரொனால்டோவை பார்க்கவே இல்லை எனச் சொல்லியுள்ளனர். அவர் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ரீப்ளேவைதான் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் சொல்லி உள்ளனர்.