Published : 20 Jan 2023 02:40 PM
Last Updated : 20 Jan 2023 02:40 PM

மல்யுத்த வீரர்கள் போராட்டம் | அரசியல் சதியை அம்பலப்படுத்துவேன்: பிரிஜ் பூஷன் சிங்

பிரிஜ் பூஷன் சிங்

புதுடெல்லி: மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தின் பின்னணியில் உள்ள அரசியல் சதியை இன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்துவேன் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் உடன்பாடு எதும் எட்டப்படவில்லை. இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைத்தே ஆக வேண்டும் என்று வீரர்கள் திட்டவட்டமாக தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அமைச்சருடனான ஆலோசனையில் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், ரவி தாஹியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில்தான் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தின் பின்னணியில் உள்ள அரசியல் சதியை இன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்துவேன் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் தெரிவித்திருக்கிறார். எந்தக் காரணம் கொண்டும் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

குற்றசாட்டும் போராட்டமும்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கும், சில பயிற்சியாளர்களும் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் புதன் கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மல்யுத்த கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "இந்த விவகாரம் விளையாட்டு வீரர்களின் நலன் சார்ந்தது என்பதால், அமைச்சகம் இதனை தீவிரமான ஒன்றாக பார்க்கிறது. இந்த விவாகாரம் தொடர்பாக 72 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். தவறினால், தேசிய விளையாட்டுத்துறை விதி 2011ன் படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x