Published : 20 Jan 2023 06:37 AM
Last Updated : 20 Jan 2023 06:37 AM

ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை - சிலிக்கு எதிராக 14 கோல் அடித்து நெதர்லாந்து சாதனை

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஆடவருக்கான ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிலி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் நெதர்லாந்து அணி கோல் மழை பொழிந்து 14-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை நெதர்லாந்து படைத்தது. இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 12-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதேசாதனையாக இருந்தது. இதை தற்போது நெதர்லாந்து முறியடித்துள்ளது.

அந்த அணி சார்பில் ஜான்சன் ஜிப் 4 கோல்களும் (6, 29, 34, 44-வதுநிமிடங்கள்), பிரிங்க்மேன் தியரி 3 கோல்களும் (25, 33, 58-வது நிமிடங்கள்), பிஜென் கோயன் 2 கோல்களும் (40, 45-வது நிமிடம்) அடித்துஅசத்தினர். இவர்களுடன் டி வில்டர்டெர்க் (22-வது நிமிடம்), வென் டேம்திஜ்ஸ் (23-வது நிமிடம்), பீட்டர்ஸ் டெர்ரன்ஸ் (37-வது நிமிடம்), பிளாக்ஜஸ்டென் (42-வது நிமிடம்), பீன்ஸ் டீன் (48-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இது நெதர்லாந்து அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. லீக் சுற்றின் 3 ஆட்டங்களிலும் நெதர்லாந்து அணி ஒட்டுமொத்தமாக 22 கோல்களை வேட்டையாடி உள்ளது. 3 வெற்றிகள் பெற்ற நெதர்லாந்து அணி 9 புள்ளிகளுடன் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது. 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த சிலி அணி தொடரில் இருந்து வெளியேறியது.

‘டி’ பிரிவில் இங்கிலாந்து அணிநேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணியின் கோல் வித்தியாசம் 9 ஆக இருந்ததால் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் வேல்ஸ் அணிக்கு எதிராக குறைந்தது 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே கால் இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியால் 4-2 என்ற கோல் கணக்கிலேயே வெற்றி பெற முடிந்தது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றின் முடிவில் தலா 7 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் இங்கிலாந்து அணி ‘டி’ பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது. இங்கிலாந்து அணியின் கோல் வித்தியாசம் 9 ஆக இருந்த நிலையில் இந்திய அணியின் கோல் வித்தியாசம் 4ஆக மட்டுமே இருந்தது. 2-வது இடம் பிடித்த இந்தியா, 3-வது இடம்பிடித்த ஸ்பெயின் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு கிராஸ்ஓவர் ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கிராஸ் ஓவர் ஆட்டத்தில் இந்தியஅணி வரும் 22-ம் தேதி நியூஸிலாந்துடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x