Published : 19 Jan 2023 01:56 PM
Last Updated : 19 Jan 2023 01:56 PM

உண்மையில் கோலி ‘வேர்ல்ட் கிளாஸ்’ வீரரா? - ஃப்ரன்ட் ஃபுட் பந்தை பேக் ஃபுட்டில் ஆடி பவுல்டு ஆனதால் சந்தேகம்!

வங்கதேசம், இலங்கை போன்ற கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக 3 சதங்களை அடித்த ‘கிங்’ என்று அழைக்கப்பட்ட கோலி நேற்று நியூஸிலாந்துக்கு எதிராக சாண்ட்னர் பந்தில் பவுல்டு ஆன விதமும், இதற்கு முன்பாக அவர் ஸ்பின்னர்களிடம் பவுல்டு ஆன விதமும் உண்மையில் விராட் கோலி ஒரு வேர்ல்ட் கிளாஸ் வீரரா என்ற கேள்வியை மறுபடியும் எழுப்பியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் லெக் ஸ்பின்னர் ஆடம் சாம்ப்பா இவரை இப்படி வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரிலும் கோலி நேற்று ஆட்டமிழந்தது போல் அவுட் ஆகியுள்ளார். எனவே இவரைப் போய் வேர்ல்ட் கிளாஸ் வீரர்களான விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்றோருடன் ஒப்பீடு செய்யலாமா என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில், சச்சின் டெண்டுல்கர் பற்றி ஒரு முறை ஆலன் டொனால்டு கூறும்போது, ‘ஒரு முறை ஆட்டமிழக்கச் செய்த பந்தில் சச்சின் 2-ம் முறை ஆட்டமிழக்க மாட்டார்’ என்று கூறினார். இதுதான் உண்மை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நோண்டி அவர் பல முறை எட்ஜ் ஆகியிருக்கலாம். ஆனால், அந்த ஒவ்வொரு பந்தின் அளவும் திசையும் வேகமும் மாறியிருக்கும், அவரை ஏமாற்ற ஏதோ ஒரு விகற்பம் பந்தில் இருந்திருக்கும். ஆனால், ஒரே லெந்த், ஒரே திசை ஒரே வேகமுடைய பல பந்துகளுக்கு ஒரே மாதிரி அவுட் ஆகும் விராட் கோலி எப்படி வேர்ல்ட் கிளாஸ் பிளேயர் என்று கருதப்படுகிறார் என்பதே கேள்வி.

இத்தனை போட்டிகளை சேஸ் செய்து கொடுத்திருக்கிறார், இத்தனை சதங்கள் எடுத்திருக்கிறார் போன்ற கணக்கீட்டுக்கு உகந்த எண்கள் ஒருபோதும் தர அளவுகோலை நிர்ணயிக்க போதுமானதல்ல. பெர்த் மைதானத்தில் ஆயிரம் வீரர்கள் ஆயிரம் இன்னிங்ஸ் ஆடியிருக்கலாம். ஆனால், கடுமையான பெர்த் பிட்சில் இங்கிலாந்தின் ‘கிரேம் ஹிக்’ ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த ஒரு 65 ரன்கள் என்பது 200 ரன்களுக்குச் சமம். ஏனெனில், பவுலிங்கும் பிட்சும் அத்தகையது. அதில் கிரேம் ஹிக் எகிறு பந்து ஒன்றை லாங் மிட்விக்கெட் பவுண்டரிக்கு சிக்சருக்கு அனுப்பியது கிரிக்கெட் வரலாற்றின் பெரிய ஷாட்களில் ஒன்று.

அதேபோல் இன்சமாம் உல் ஹக் ஒருமுறை கூறினார்... உலகின் பெரிய பிளேயர் என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் அனில் கும்ப்ளேவை இந்திய பிட்சில் 5-ம் நாள் ஆட்டத்தில் ஆடி விட முடியுமா? அப்படி ஆடுபவர்தான் பெரிய வீரர் என்று சொல்லிக் கொள்ள தகுதியானவர் என்றார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். ஆம்! அனில் கும்ப்ளேவை 5-ம் நாள் இந்தியப் பிட்சில் சரியாக ஆடுவது அத்தனை கடினமே.

சுனில் கவாஸ்கர் ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் சரியான குழிப் பிட்சில், பாகிஸ்தானின் ஆஃப் ஸ்பின்னர் டாசிஃப் அகமது பந்தை பிட்சுக்கு வெளியே பிட்ச் ஆக்கி லெக் ஸ்டம்புக்கு வெளியே திருப்பிக் கொண்டிருந்தார். ஆடவே முடியாத பிட்ச். அதில் கவாஸ்கர் எடுத்த 96 ரன்கள் உலகின் எந்த ஒரு பெரிய இன்னிங்ஸை விடவும் பெரியதே. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடினமான பீல்டிங், பவுலிங்குக்கு எதிராக சச்சின் எடுத்த அந்த 111 ரன்களை இன்றும் மறக்க முடியுமா?

ஒருமுறை மே.இ.தீவுகள் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஆஸ்திரேலியாவின் வேகப்புயல் டெனிஸ் லில்லி அவரது உச்சத்தில் இருந்த தருணம், கொடூரமான வேகப்பந்து வீச்சாளர்கள் தாம்சன், லென் பாஸ்கோவும் உள்ளனர். அந்தத் தொடரில் விவியன் ரிச்சர்ட்ஸின் குறைந்தபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 70 என்று சுனில் கவாஸ்கர் தனது ‘ஐடல்ஸ்’ என்ற நூலில் கூறியதையெல்லாம் பார்த்து விட்டு, இன்று முன் காலில் வந்து ஆட வேண்டிய பந்தை பின் காலில் சென்று தவறான லைனில் ஆடி சிறியதாக பந்து திரும்ப பவுல்டு ஆன விராட் கோலியை அவரது வங்கதேச, இலங்கை, ஆப்கன் சதங்களை வைத்து கிங் கோலி என்றும் வேர்ல்ட் கிளாஸ் என்றும் கூறினால் எப்படி ஏற்றுக் கொள்வது? கோலி தன்னளவில் வேர்ல்ட் கிளாஸ், ஆனால் உலக கிரிக்கெட்டின் கிரேட்களுடன் ஒப்பிட அவரிடம் ஒன்றுமில்லை. 2014 ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் திக்கித் திணறினார், பிறகு ஆயிரக்கணக்கான நாட்கள் சதமே இல்லாமல் வறண்டு போய் மீண்டும் கத்துக் குட்டி அணிகளுக்கு எதிராக சதம் எடுக்கிறார்.

அதுவும் வங்கதேசத் தொடரில், டெஸ்ட் போட்டியில் 22 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தாரே அதை எப்படி வேர்ல்ட் கிளாஸ் பிளேயர் ஆடும் ஆட்டம் என ஒப்புக் கொள்ள முடியும்?

நேற்று என்ன நடந்தது? - சாண்ட்னர் வீசுகிறார். முதல் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது. இந்த பவுண்டரி பந்தை கனெக்ட் செய்ய முடியவில்லை. அடுத்த பந்து வெறுமனே ஃபிளாட்டாக லெந்தில் விழுந்து மிக லேசாக திரும்பியது பந்து. பந்தின் திசையை தவறாகக் கணித்தார் கோலி, லேசாக டர்ன் ஆகி ஆஃப் ஸ்டம்பில் பட்டு பவுல்டு ஆனார்.

பந்தின் வேகம் 92 கிமீ. ஒருவேளை வேகம் கோலியைக் காலி செய்திருக்கலாம், ஆனால் இது ஃபுல் லெந்த் பந்து இதற்கு முன்காலில் வந்தல்லவா ஆடியிருக்க வேண்டும். அப்படி ஆடியிருந்தால் அது ஒன்றுமில்லாத ஒரு பந்துதான், பின் காலில் சென்று ஆடியதால் இன்சைட் தி லைனில் ஆடி பந்தின் திருப்பத்திற்கு அவர் தயாராக இல்லாமல் பவுல்டு ஆனார். பெரிய டர்ன், இவரும் ஸ்டம்புகளை கவர் செய்திருந்தா பேட் - கால் காப்பு இடையில் போய் பவுல்டு ஆனது என்றால் ஒப்புக் கொள்ளலாம் பெரிய பந்த் என்று. முன் காலில் வந்து ஆடியிருந்தால் ஒன்றுமே இல்லாத சாதாரணப் பந்தை விக்கெட் பந்தாக மாற்றியது விராட் கோலியின் தவறான ஆட்டமே. உண்மையில் சொல்லப்போனால் அவர் பின் காலையும் கூட நகர்த்தவில்லை.

சாண்ட்னரிடம் இவ்வாறு 2-வது முறையாக ஆட்டமிழந்திருக்கிறார் கோலி. இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியது: “கோலி அந்தப் பந்தின் லைனுக்கு உள்ளே விளையாடினார். அதனால் பந்து லேசாகத் திரும்புவதற்கு கோலி அனுமதித்தார். முன்னால் சென்று ஆட வேண்டிய பந்தை பின்னால் இருந்தபடியே ஆடி மிகப்பெரிய தவறு செய்தார். அது ஷார்ட் பிட்ச் பந்து இல்லை. லேசாக திரும்பியது அவ்வளவே. நல்ல பார்மில் இருக்கும் கோலியின் மட்டையின் வெளி விளிம்பைக் கடந்து சென்று பவுல்டு ஆனது” என்றார்.

எப்போதுமே ‘குட் பிளேயர்’ என்பவர்களுக்கும் கிரேட் பிளேயர் என்பவர்களுக்கும் வேறுபாடு உள்ளது, விராட் கோலி ஒரு குட் பிளேயர்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x