விளையாட்டு துறை அமைச்சகம் எதிர்ப்பு எதிரொலி: ஆயுட் கால தலைவர் பதவியை ஏற்க சுரேஷ் கல்மாடி மறுப்பு

விளையாட்டு துறை அமைச்சகம் எதிர்ப்பு எதிரொலி: ஆயுட் கால தலைவர் பதவியை ஏற்க சுரேஷ் கல்மாடி மறுப்பு
Updated on
1 min read

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவருக்கு கடிதம்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட் கால தலைவராக நிய மிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவர்களாக சுரேஷ் கல்மாடி, அபய் சிங் சவுதாலா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

72 வயதான சுரேஷ் கல்மாடி கடந்த 1996 முதல் 2011-ம் ஆண்டு வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்தார். 2011-ல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் போது நிதிமுறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கல்மாடி 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடும் எதிர்ப்புக்கு பிறகு தனது பதவியை இழந்தார்.

இதபோன்று சவுதாலா கடந்த 2012 முதல் 2014 வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்தார். இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஆயுட்கால தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டதற்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு, மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆயுட்கால தலைவர் பதவியை ஏற்க மறுத்து சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமசந்திரனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், “ஆயுட்கால தலைவர் பதவிக்கு என்னை தேர்வு செய்து பெருமை சேர்த்ததற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனினும் மரியாதைக்குரிய இந்த பதவியை ஏற்றுக்கொள்வதற்கு இது சரியான நேரம் இல்லை என நான் கருதுகிறேன்.

என் மீதான அவப்பெயர் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை மரியாதைக்குரிய இந்த பதவியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in