

2016-ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த டெஸ்ட் அணியில் இந்திய கேப்டன் விராட் கோலி இடம்பெறாதது ரசிகர்களுக்கு வருத்தங்களை ஏற்படுத்திய நிலையில் அவர் பெயர் இடம்பெறாததற்கான காரணத்தை அறிந்து கொள்வதும் முறையே.
3 இரட்டைச் சதங்களையும், 2016-ல் அதிக ரன்களையும், இங்கிலாந்துக்கு எதிராக 655 ரன்களையும் விளாசிய விராட் கோலியை எப்படி புறக்கணிக்கலாம் என்ற கேள்வியில் உணர்வுபூர்வ நியாயம் இருக்கிறது.
ஆனால், ஐசிசி 2016 சிறந்த டெஸ்ட் அணியைத் தேர்வு செய்வதற்கு அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்ட காலக்கட்டம் 14 செப்டம்பர் 2015 முதல் 20 செப்டம்பர் 2016 வரையிலான டெஸ்ட் ரன்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி 8 டெஸ்ட் போட்டிகளில் 451 ரன்களை 45.10 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலக்கட்டத்தில்தான் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய போது கோலி ஒரேயொரு அரைசதத்துடன் 200 ரன்களையே எடுத்தார். மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் மே.இ.தீவுகளுக்கு எதிரானதாகும். இதில்தான் விராட் கோலி தனது முதல் டெஸ்ட் இரட்டைச் சதம் அடித்தார். எனவே ஐசிசி டெஸ்ட் அணிக்கு விராட் கோலி பெயர் பரிசீலிக்கப்படவில்லை.
மாறாக இதே காலக்கட்டத்தில் ஒருநாள் போட்டிகளில் கோலி 10 போட்டிகளில் 626 ரன்களை 62.60 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 94.13. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கோலி 2 சதங்கள், 2 அரைசதங்களுடன் 76.20 என்ற சராசரியில் ரன்கள் குவித்தார்.
கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட இதே காலக்கட்டத்தில் ஐசிசி டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்தின் அலஸ்டர் குக் 14 டெஸ்ட் போட்டிகளில் 1269 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் 7 அரைசதங்கள் அடங்கும், சராசரி 55.57. இதில் அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 263 ரன்களும் குக்கிற்குப் பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.