

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தில் 386 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான நாராயண் ஜெகதீசன் சதம் விளாசினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட் செய்தது. சாய் சுதர்சன் 2, பாபா அபராஜித் 23 ரன்களில் வெளியேறினர். 3-வது விக்கெட்டுக்கு நாராயணன் ஜெகதீசனுடன் இணைந்த பாபா இந்திரஜித் இன்னிங்ஸை கட்டமைத்தார். சிறப்பாக விளையாடி வந்த பாபா இந்திரஜித் 113 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் சித்தார்த் பந்தில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு ஜெகதீசனுடன் இணைந்து இந்திரஜித் 157 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய பிரதோஷ் ரஞ்ஜன் பால் சீராக ரன்கள் சேர்த்தார். மறுபுறம் சதம் விளாசிய நாராயண் ஜெகதீசன் 152 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் எடுத்த நிலையில் சித்தார்த் பந்தில் வெளியேறினார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் தமிழ்நாடு அணி 90 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 386 ரன்கள் குவித்தது. ரஞ்ஜன் பால் 99,விஜய் சங்கர் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.